24 Sept 2025

2025 ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம்

SHARE

2025 ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் காட்டுயானை உள்ள பிரதேசம் வெல்லாவெளி ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 96 கிலோ மீட்டர் காட்டு யானை வேலி வந்தும் வெல்லாவெளி பிரதேசத்திற்கு ஒரு கிலோமீட்டர் கூட வழங்கப்படவில்லை அது ஒரு துரதிஷ்ரவசமான சம்பவம் என போரதீவுபற்றுபற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 2025 ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் புதன்கிழமை (24.09.2025) இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதேச செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போரதீவுப்பற்று  கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆரம்ப கூட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த கூட்டத்தினை தலைமை தாங்கி நடாத்தியிருந்தார்.

நவகிரி, தும்பங்கேணி மற்றும் சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் ஊடாக இம்முறை வெல்லாவெளியில் 
மண்டூர், வெல்லாவெளி மற்றும் பழுகாமம், ஆகிய கமநல பிரிவுகளில்
சுமார் 23200 ஏக்கர்களில் விதைப்பு செய்யப்படவுள்ள நிலையில், விதைப்பு ஆரம்ப திகதி, அறுவடை ஆரம்ப திகதி, கால் நடைகளை மேச்சற் தரைப்பகுதிகளுக்கு கொண்டு செல்வது மற்றும் மீண்டும் கால்நடைகளை கொண்டு வருவதற்கான திகதி, வெட்டு இயந்திரங்களுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ள கொடுப்பனவு, 
வயற் காவலாளிகளுக்கான கொடுப்பனவு, கால் நடைகளால் ஏற்படுத்தப்படும் சேதங்களுக்கு ஏற்ப கால்நடை உரிமையாளரிடம் இருந்து நஸ்ட ஈட்டை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு விவசாயிகளுக்கு சாதகமான முடிவுகள் எட்டப்பட்டது.

மேலும் இதன் போது விவசாயிகளுக்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக வழங்கப்படும் வங்கி கடன்கள், அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியங்கள், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திட்டங்கள், தொழில் நுட்ப உதவிகள், விதை நெல் விநியோகம், விவசாய கமநல காப்புறுதி, வாய்க்கால்கள் திருத்தியமைத்தல், குளங்கள் புனரமைத்தல், விவசாயிகளுக்கான மானியம் வழங்கல், யானையால் ஏற்படும் சேதங்களை தவிர்த்தல் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அவற்றில் அதிகமான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் சில பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான ஆலோசனைகள் மேலதிக அரசாங்க அதிபரினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆரம்ப கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத்,  மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், விவசாய விரிவாக்கல் திணைக்கள அதிகாரிகள், தேசிய உரச் செயலக மாவட்ட பிரதிப்பணிப்பாளர், பிரதேச செயலக அதிகாரிகள், பொறியியலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதன் போது எதிர்வரும் 15.10.2025 திகதி விதைப்பு நடவடிக்கை ஆரம்பிப்பது என முடிவு எட்டப்பட்டு கூட்டம் நிறைவுபெற்றது.











SHARE

Author: verified_user

0 Comments: