வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்கான வருமானத்தை
ஈட்டித் தரும் சுயதொழில் திட்டம் வெற்றியளித்துள்ளது. சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணிக் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், இளைஞர்கள், யுவதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பரிந்துரை வலையமைப்பின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கோழி வளர்ப்புப் பண்ணையில் இடம்பெற்ற நிகழ்வில் பயனாளிகள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அங்கு பயனாளிகளால் வளர்க்கப்பட்டு இறைச்சிக்குத் தயாரான நிலையில் இருந்த சுமார் 100 கோழிகளை விற்பனை செய்யும் புதன்கிழமை(09.04.2025) நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் இறைச்சிக் கோழிகளை விற்பனை
செய்த வருமானத்தைக் கொண்டு பரிந்துரை வலையமைப்பிலுள்ள பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கும்
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி,
சேர்க்கிள் அமைப்பினால் 2023ஆம் ஆண்டு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் களுவன்கேணி பிரதேசத்தை இணைத்ததான இந்த பலப்படுத்தப்பட்ட பரிந்துரை வலையமைப்பின் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும் சுயதொழில் முயற்சிக்கான செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
முதற்கட்டமாக பொன் எனும் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சுமார் 5 இலட்ச ரூபாய் செலவில் இறைச்சிக் கோழிகள் வளர்ப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன. அத்திட்டம் சுமார் ஒரு மாத காலப்பகுதியில் வெற்றியளித்து அதன் மூலம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நல்வாய்ப்பு அடுத்து வரும் 6 மாதகாலப் பகுதிக்குள் மேலும் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் சுய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்தற்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இளையோரினதும் பெண்களினதும் வகிபாகம் மிக முக்கியமானது என்பதைக் கருத்திற் கொண்டு சேர்க்கிள் அமைப்பினால் உள்ளுர் மட்டத்தில் செயல்பாட்டு பரிந்துரை வலையமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வலையமைப்பக்களை வலுப்படுத்தவற்கான உதவு ஊக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் வலையமைப்புக்களை வலுப்படுத்தும் வகையில் அதிலுள்ள இளையோருக்கும் பெண்களுக்கும் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் என்பனவற்றோடு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.” என்றார்.
நிகழ்வில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர்.முஹம்மத் றுசைத், இளம் பெண்கள் அமைப்பின்
வெளிக்கள இணைப்பாளர் கே.ஜெயவாணி உட்பட பரிந்துரை
வலையமைப்பிலுள்ள பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment