15 Jan 2025

பலத்த மழை வீழ்ச்சியால் மண்டூர் - வெல்லாவெளி வீதியை ஊடறுத்துப்பாயும் வெள்ளம்.

SHARE

பலத்த மழை வீழ்ச்சியால் மண்டூர் - வெல்லாவெளி வீதியை ஊடறுத்துப்பாயும் வெள்ளம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற பலத்த மழை வீழ்ச்சியினால் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருகின்றது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டள்ளது.

குறித்த வீதியூடாக இவ்வாறு வெள்ள நீர் ஊடறுத்துச் செல்வதனால் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், அரச ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் அச்சத்துடனேயே பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது 03 ஆம் தவணை பரீட்சை பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்று வருவதானால் மண்டூர் வெல்லாவெளி வீதியைப் பயன்படுத்தி பாடசாலைக்குச் செல்லும், வேத்துச்சேனை, மண்டூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று வருவதிலும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தற்போது பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சியால் மாவட்டத்திலுள்ள சிறு குளங்கள் நிரம்பி வழிவதுடன், மிகப்பிரதான பெரிய குளங்களான நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 31.5 அங்குலம், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 32 அடி 2 அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 17அடி 4 அங்குமாகவும் உயர்ந்துள்ளதாகவும், அக்குங்களிலிருந்தும் மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இவ்வருடம் 2025.01.01 ஆம் திகதியிலிருந்து  வியழக்கிழமை 2025.01.15 ஆத்திகதி காலை 8.30 மணிவரையில் 159.8 மில்லி மீற்றர் மழை வீழ்சியும், கடந்த 2024 ஆம் ஆண்டு 1974.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக மாவட்ட வாநிலைய அவதான நிலையம் தெரிவித்துள்ளது.














SHARE

Author: verified_user

0 Comments: