6 Oct 2022

மக்களது திட்ட முன் மொழிவுகளை கவனத்திற் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் கருத்தரங்கு.

SHARE

மக்களது திட்ட முன் மொழிவுகளை கவனத்திற் கொண்டு  வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் கருத்தரங்கு.

உள்ளுராட்சி மன்றங்களில் அவ்வப் பிரதேச மக்களது திட்ட முன் மொழிவுகளை உள்வாங்கி வருடாந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் கருத்தரங்கு வெருகல் பிரதேச சபையில் இடம்பெற்றது.

உள்ளுராட்சி மன்றங்களுக்குள்ள பௌதீக, மனித வளங்களை வினைத்திறனாகவும் செயற்திறனாகவும் பயன்படுத்தி பிரதேச மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு மக்களும் பிரதேச சபை நிருவாகமும் இணைந்து பங்குபற்றிய பயிற்சிச் செயலமர்வு வெருகல் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் வியாழனன்று 06.10.2022 நடைபெற்றது.

ஆசிய மன்றத்தின் நிதி அனுசரைணயில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் பொன். சற்சிவானந்தம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இணைப்பாளர் சற்சிவானந்தம் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் பணியாற்றுகின்றபோது அரச மற்றும் அரசு சாரா நிறுவனப் பணியாளர்களுக்கும் வலுவூட்டல் தேவைப்படுகின்றது. அதிலொரு அம்சமாகத்தான் பிரதேச சபை நிருவாகத்தினருக்கும் மக்களுக்குமிடையில் மக்கள் பற்கேற்புடனான வரவு செலவு பாதீடு தயாரிக்கும் நிகழ்ச்சித் திட்டப் பயிற்சிகள் இடம்பெறுகின்றன. சேவை வழங்குகின்ற நிறுவனங்களை பலப்படுத்துதல் என்பதும் மூலோபாய முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மக்கள் சேர்ந்து பணியாற்றுகின்ற கட்டமைப்புக்களில் மிக முக்கியமானது உள்ளுராட்சி மன்றங்கள். எனவேதான் உள்ளுராட்சி மன்றங்களையும் இணைத்ததாக மக்கள் பங்குபற்றுதலோடு வரவு செலவுத் திட்டத் தயாரிப்புப் பயிற்சித் தெளிவுபடுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இது, பிரதேச வளங்களைப் பயன்படுத்தி மக்கள் அதி உச்சப் பயனைப் பெறும் முயற்சியாகும். எதிர்காலத்தில் எந்தவொரு செயற்திட்டமும் மக்களபங்களிப்புடன் இடம்பெறும்போது அது வெற்றியளித்து நீடித்து நிலைக்கக் கூடியதாக இருக்கும். அதனால் பிரதேச மக்கள் அதி உச்சப் பயனைப் பெறுவார்கள.;” என்றார்.

பயிற்சிச் செயலமர்வின் இறுதியில் மக்கள் பங்கேற்புடனான வரவு செலவுத் திட்டம் பிரதேச மக்களின் சமூக, பொருளாதார, சுகாதார, பொது வசதிகள், நலன்புரி சேவைகள் உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அடிப்படையில் தேவைகள் அடையாளம் காணப்பட்டு பிரதேச மக்களால் வெருகல் பிரதேச சபை தவிசாளர் உட்பட நிருவாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் தேவராசா விஜயரகுவரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம். தவமுரளீதரன், உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை அலுவலர்கள், பிரதேச சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்திச் சங்கம், கிராம மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்து  கலந்து கொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: