மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 27ஆம் திகதி அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஒக்ரோபெர் 02ஆம் திகதி காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக இந்த அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், சீ. யோகேஸ்வரன், பா. அரியநேத்திரன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா. சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு இந்த அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் திலீபன் என்பவரை நினைவு கூரும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட நபர்களினால் விளக்கு ஏற்றும் நிகழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தாங்கள் எந்தவித நிகழ்வினையும் ஏற்பாடு செய்யாத நிலையில் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், பா. அரியநேத்திரன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா. சங்கரப்பிள்ளை ஆகியோர் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளனர்.
பொலிஸார் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கானது உண்மைக்கு புறம்பான வகையில் பொலிஸார் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.
திலீபனின் நினைவு தினத்தினை நாங்கள் அனுஷ்டிக்கவில்லை, ஆனால் நாங்கள் அனுஷ்டிக்க நினைத்ததாக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஞா. சிறிநேசன் தெரிவித்தார்.
25ஆம் திகதி இரவு திலீபனின் நினைவு தினத்தினை செய்யக்கூடாது என்ற தடையுத்தரவினை பொலிஸார் வீடுகளுக்கு வந்து தந்திருந்தார்கள்.
அவ்வாறு இருக்கத்தக்கதாக அந்த நிகழ்வு நடைபெறாத நிலையில் நாங்கள் அதனை நடாத்துவதற்கு எத்தனித்ததாக இந்த குற்றச்சாட்டு எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டாக இருக்கின்ற காரணத்தினால் எங்களது முறைப்பாட்டினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவுசெய்துள்ளோம்.
இந்த வழக்கிற்கு முகம்கொடுப்பதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம். இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவது என்பது மனவேதனைக்குரியதாக இருக்கின்றது.
கடந்த காலத்தில் இந்த விடயங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்றது. தற்போது பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகள் போடுவது என்பது கவலைக்குரிய விடயமாகும் எனவும் சிறிநேசன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment