9 Dec 2019

மட்டக்களப்பில் மீண்டும் மழை குளங்களின் வான்கதவுகள் திறப்பு.

SHARE
மட்டக்களப்பில் மீண்டும் மழை குளங்களின் வான்கதவுகள் திறப்பு.
கடந்த வியாழக்கிழமைவரை (05) ஒருவாரத்திற்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவந்த அடைமழை கடந்த வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு தினங்களில் ஓய்ந்திருந்தது. இதனால் தேங்கியிருந்த வெள்ளீர் மிகவும் வேகமாக கடலைநோக்கி வடிந்து கொண்டிருந்த இந்நிலையில்; மீண்டும் திங்கட்கிழமை (09) அதிகாலைமுதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால். பல கிராமங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் நிலமை ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் மீண்டும் அவர்களிது இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இருந்த போதிலும் குடியிருப்புக்களிலும், கிராமங்களிலுள்ள உள்வீதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதனால் மக்களின் உள்ளுர் போக்குவரத்துக்களிலும், ஏனைய இதர வேவைகளைப் பெற்றுக் கொள்வதிலும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேத்தாத்தீவு, குருமண்வெளி, எருவில், கோவில்போரதீவு, பழுகாமம், பெரியபோரதீவு, வெல்லாவெளி, பொறுகாமம், தும்பங்கேணி, கொக்கட்டிச்சோலை, உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள சிறிய குளங்கள் அனைத்தும் நிரபி வழிக்கின்றதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தினுள் இருக்கின்ற கலுகொல் ஓயா எனும் குளத்தின் 2 வான்கதவுகள் ஒரு அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன. இக்குளத்திலிருந்த திறந்து விடப்பட்டுள்ள நீர் நவகிரிக் குளத்தில் விழுகின்றன. எனவே நவகிரிக் குளத்தில் தற்போது 30.7 அடி நீர் நிரம்பியுள்ளது. இக்குளத்தின் மொத்த நீர் கொள்ளளவு 31 அடி ஆகும். தற்போது நவகிரிக் குளத்தின் 2 வான்கதவுள் 5 அடி உயர்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக அக்குளத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் மு.பத்மதாசன் தெரிவித்தார்.

உன்னிச்சைக் குளத்தின் நீர் கொள்ளளவுமட்டம் 33 அடியாகும் தற்போது அக்குளத்தில் 30.2 இஞ்சி நிர்உள்ளது. 

உறுமாமம் குளத்தின் நிர் கொள்ளளவு 15.8 இஞ்சி ஆகும் தற்போது அக்குளத்தின் நீர்மட்டமும் 15.8 இஞ்சி அளவு உள்ளது. இக்குளத்தில் தற்போது 2 வான்கதவுகள் 8 அடி உயத்தில் திறந்து விடப்பட்டுள்ளது.

வெளிக்காக்கண்டிய குளத்தின் மொத்த நீர் கொள்ளளவு 15.5 இஞ்சி ஆகும் தற்போது அக்குளத்தில் 15.2 இஞ்சி நீர் நிரம்பியுள்ளது.

கட்டுமுறிவுக்குளத்தின் மொத்த நீர் கொள்ளளவு 11.06 இஞ்சி ஆகும் தற்போது அக்குளத்தில் 11.7 இஞ்சி நீர் நிரம்பியுள்ளது. 

கித்துள்வெவக்குளத்தின் மொத்த நீர்மட்டம் 12 அடி ஆகும் தற்போது அக்குளத்தில் 10.5 இஞ்சி நீர் நிரம்பியுள்ளது.

வடமுனைக்குளத்தின் மொத்த நீர்மட்டம் 12.6 இஞ்சி ஆகும் தற்போது அக்குளத்தில் 12.7 இஞ்சி நீர் நிரம்பியுள்ளது.

வாகனேரிக்குளத்தின் மொத்த நீர்மட்டம் 19.7 இஞ்சி ஆகும் தற்போது அக்குளத்தில் 17.3 இஞ்சி நீர் நிரம்பியுள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.நிரோசன் தெரிவித்தார். இது இவ்வாறு

இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப் படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி க.சூரியகுமார் திங்கட்கிழமை (09) காலை தெரிவித்தார். இந்நிலமை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மொனராகலை, பொலன்னறுவை, பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 200 மில்லி மீற்றர் அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மற்றும் மாத்தளை மாவட்டங்களில், சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என தெரிவித்த அவர்..

இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக தென்கிழக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்பரப்புகளில்காற்றுடன் கூடிய மழை நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம்55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். என மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி க.சூரியகுமார் மேலும் தெரிவித்தார்.




















SHARE

Author: verified_user

0 Comments: