இன, மொழி பாகுபாடு காட்டிக்கொண்டு பிரிந்து வாழ்வது எந்தவிதத்திலும் எமக்கு அனுகூலத்தை ஏற்படுத்தாது என ஆசியா மன்றத்தின் (Asia
Foundation) திட்ட முகாமையாளர்; சட்டத்தரணி ஷாஜஹான் றொஷான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சமாதான செயற்பாடுகள் பற்றி மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிகள் ஆகியோருக்கிடையில் தெளிவுபடுத்தும் கொள்கை ஆலோசனைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 31.03.2019 இடம்பெற்றது.
மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்;து உரையாற்றிய ஆசிய மன்றத்தின் திட்ட முகாமையாளரான சட்டத்தரணி ஸாஜஹான் றொஷான் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மனித நேயத்தை மதிக்கின்றபோது வேறுபாடுகளைத் தாண்டி நாம் அனைவரையும் ஒன்றிணைகின்ற சக்தியாக மாறுவதனால்தான் சமாதானத்தை அடைந்து கொள்ள முடியும்.
சர்வமதக் குழுக்களும் ஏனைய சிவில் குழுக்களும் இனங்களையும் மதங்களையும் தாண்டி மனித நேயத்தை வளர்ப்பதில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.
பொலிஸாருக்கும் மக்களுக்கும் பிணக்குகள் எற்படும்போது சட்டத்தையும் சமூகப் பொறுப்பையும் மதிக்க வேண்டும்.
அதேவேளை பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்யலாம். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலும்; முறைப்பாடு செய்யலாம்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு 17வது அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
ஒரே ஒரு உரிமையைத் தவிர எங்களது அனைத்து உரிமைகளையும் நாம் அரசாங்கத்துக்கு கொடுத்துள்ளோம் எங்கள் சார்பாக அதை பாதுகாத்துத் தாருங்கள் என்று. அதில் கொடுக்காத ஒரே ஒரு உரிமை வாக்குரிமை மாத்திரம்தான்.
நாம் அரசாங்கத்துக்கு கொடுத்துள்ள உரிமைகளை என்று அவர்கள் பாதுகாக்க தவறுகின்றனரோ அன்று அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கலாம்.
ஜனாதிபதி தனது சத்தியப்பிரமாணத்தில்இலங்கை அரசியல் யாப்பை மீறமாட்டேன், சட்டத்தின் முன் அனைவரும் சமம், எவரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்ப் மாட்டார், மதங்கள் அனைத்தும் சுதந்திரமானது, கருத்துச் சுதந்திரம் இதையெல்லாம் பாதுகாப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்துதான் ஜனாதிபதி பதவியேற்கிறார்,
எமது எதிர்கால சந்ததியினரை மன உறுதிப்பாடு கொண்டவர்களாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும், அவர்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படுகின்றபோது, குற்றம் இழைக்க எத்தணிக்கப்படுகின்றபோது தைரியமாக பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு இடக்கூடிய பிள்ளைகளை நாம் உருவாக்க வேண்டும்.
மக்களையும் பொலிஸாரையும் இணைப்பதில் சமூக பொலிஸ் குழுக்களின் பங்களிப்பு மிக அவசியமானதொன்றாகும்
இந்த மாற்றத்தை எம்மத்தியில் கொண்டுவரவில்லையென்றால் தொடர்ந்தும் நாங்கள் பொலிஸாரை எதிரியாகவே பார்த்துக்கொண்டிருப்போம் அவர்களும் எங்களை எதிரியாகவே பார்த்துக்கொண்டிருப்பர். இறுதியில் பாதிக்கப்படுவது நாமாகத்தான் இருப்போம்.
ஆகவே, எவ்வாறு பொலிஸையும் மக்களையும் இணைக்கலாம், எவ்வாறு எமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம், வருங்கால சந்ததியினர் பொலிஸ் பற்றி என்ன எண்ணக்கரு கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றியெல்லாம் நாம் சிந்திக்கவேண்டும்.
நாம் இன, மொழி பாகுபாடு காட்டிக்கொண்டு பிரிந்து வாழ்வது எந்தவிதத்திலும் எமக்கு அனுகூலத்தை ஏற்படுத்தாது என்ற காரணத்தால்தான் கடந்த முன்று வருடங்களுக்கு முன்னரே ஆசிய மன்றம் தேசிய சமாதானப் பேரவையும் இணைந்து செயற்பட்டு, இனங்களுக்கிடையே உற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட மட்டத்திலே சர்வமதக் குழுக்களை அமைப்பதன் மூலம் மக்களுக்கும் குழுக்களுக்கும் உள்ள தொடர்புகள் அதிகரிக்கும்போது அங்கு சமூக நல்லிணக்க செயற்பாடுகளை ஏற்படுத்தலாம்.
இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் சமாதான செயற்பாடுகளுக்கான நிகழ்சித் திட்ட உதவியாளர் மெலானி சற்றியாகோ (Melani
Satiago) உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment