தேசத்தின் வேர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னை பூபதியின் 30வது நினைவு தினத்தையொட்டிய உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டிக் கொண்டுள்ளது.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் கணேசன் பிரபாகரன் தலைமையில் இறுதிப் போட்டியும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வும் புதன்கிழமை மாலை 18.04.2018 இடம்பெற்றது.
இறுதிப் போட்டி புன்னச்சோலை கோப்றா அணி மற்றும் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது.
போட்டி ஆரம்பித்து 08 நிமிடங்களில் கோப்றா அணி கோல் காப்பாளரின் முறையற்ற ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து கோப்றா அணி வீரர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
அதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டு இறுதியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் முதலிடத்தை ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியும் இரண்டாமிடத்தை புன்னைச்சோலை கோப்றா அணியும் பெற்றுக் கொண்டன.
சிறந்த கோல் காப்பாளருக்கான கிண்ணத்தை புன்னைச்சோலை கோப்றா அணி வீரரும், சிறந்த விளையாட்டு வீரருக்கான கிண்ணத்தை ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி வீரரும் பெற்றுக் கொண்டனர்.
அன்னை பூபதியின் நினைவு தினத்தை அரசியல் இலாபம் கருதி யாரும் எவ்விதத்திலும் தங்களின் அனுமதியின்றி நடாத்தக் கூடாது என்று அன்னை பூபதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
அதனால், ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டி நடைபெறுமா என்கின்ற ஆதங்கம் எழுந்திருந்தது. போட்டி ஏற்பாட்டாளர்களின் இடையறாத முயற்சியினால் அன்னை பூபதியின் பிள்ளைகள் ஏற்கெனவே ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதால் போட்டியை நடாத்த அனுமதியை வழங்கிருந்தனர்.
அரசியல் இலாபங்களுக்காக தங்களது அன்னையின் நினைவு தினம் பயன்படுத்தப்படக் கூடாது என்று முறையிடப்பட்டிருந்த போதிலும் ஏற்கெனவே அழைக்கப்பட்டதின் பிரகாரம் இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் அதிதிகளாக கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் ரீ. சரவணபவான், பிரதி முதல்வர் கே. சத்தியசீலன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி. அரியநேத்திரன், மாநகரசபை உறுப்பினர்களான ரூபாகரன், மதன், சுரேஸ்குமார், காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ. செல்வேந்திரன், இராசமாணிக்கம் அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் ஆர். சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment