சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு (11.04.2018) ஏறாவூர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பியோடியதைத் தொடர்ந்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் இருவர் உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலி திருட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது திங்கட்கிழமை 09.04.2018 கைது செய்யப்பட்டிருந்தார்.
பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயாராக இருந்தபோது ஏறாவூர் பொலிஸ் நிலையப் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று பொலிஸாரிடம் கூறிவிட்டு பொலிஸார் சிறுநீர் கழிக்க சந்தர்ப்பம் வழங்கியபோது செவ்வாய்க்கிழமை 10.04.2018 அதிகாலை 5 மணியளவில் தப்பித் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் குறித்த சந்தேக நபரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக கடமையில் நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவர் உடனடியாக கடமையிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டனர்.
இவ்வேளையில் தப்பியோடிய சந்தேக நபரைத் தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக இறங்கினர். அவ்வேளையில் புதன்கிழமை 11.04.2018 அதிகாலை 4 மணியளவில் ஏறாவூர் தாமோதரம் வீதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த வேளையில் மைக்கல் றொஷான் (வயது 24) என்ற சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment