வேலையற்ற பட்டதாரிகளை பயிலுனராக இரண்டு வருட பயிற்சி அடிப்படையில் சேர்த்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ் ஆண்டு அடிப்படையிலும், நேர்முகத் தேர்வில் தோற்றியவர்கள் அனைவரையும் இணைப்பதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடைபெற்று வரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு புள்ளியிடல் முறை தொடர்பில் ஜனாதிபதிக்கு வெள்ளிக்கிழமை (20) அனுப்பியுள்ள கடிதத்திலேயே துரைரெட்ணம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவரது கடிதத்தில்,
கொள்கைத் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சினால் முழு இலங்கையிலுமுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பயிலுனராக இரண்டு வருட பயிற்சி அடிப்படையில் சேர்த்துக் கொள்வதற்காக 31.12.2016 அன்று பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களாய் இருக்கவேண்டு மென்றும், 8.9.2017 திகதியில் 35 வயதிற்கு மேற்படாதவராக இருக்கவேண்டுமென்ற அடிப்படையிலும் விண்ணப்பம் கோரப்பட்டதென்பது வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒர் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.
இத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஏறக்குறைய 2500 ற்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றுவருவதாக அறியமுடிகிறது. இந் நேர்முகத் தேர்வில் சான்று ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் 100 புள்ளிகள் பெறக்கூடிய வாய்புக்கள் உள்ளதாக அறிகின்றேன்.
இதில் 65 புள்ளிகளை பெறுவதற்கான வாய்ப்புக்கள் 90 சத வீதமானோருக்கு காணப்படவில்லை என்பது எனது கணிப்பாகும். அண்ணளவாக 35 புள்ளிகளை மாத்திரமே அதிகபட்சமான பட்டதாரிகள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணக்கூடியதாக நான் உணர்கின்றேன். இதனை தேசிய ரீதியாக பரிசீலனை செய்யுமிடத்து புள்ளிகளில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்படக்கூடும்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் குறிப்பிட்ட புள்ளியிடல் முன்னெடுக்கப் படுமாயிருப்பின் ஒருசிலரே இரண்டு வருட பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எனவே இரண்டு வருட பயிற்சியில் இணைக்கப்படவுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் புள்ளிகள் பரீசிலனை செய்யப்பட்டால் மட்டுமே 800 - 1000 பேர் வரையில் உள்வாங்கப்பட சந்தர்ப்பம் ஏற்படும். இது தவறுமிடத்து மிகச் சிறுதொகையினரே மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே புள்ளியிடலையும், வயதெல்லையையும் பரிசீலனை செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த, நேர்முகத் தேர்விற்கு தோற்றிய அனைவரையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுனர், கொள்கைத் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் செயலாளர், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment