3 Apr 2018

ஏறாவூரில் மின்சார விஸ்தரிப்பு அபிவிருத்தி வேலைகளுக்காக பிரதி வியாழன் தோறும் இடம்பெறும் மின் துண்டிப்பு காலவரையறையின்றித் தொடரும் ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலைய மின் அத்தியட்சகர் சி. சுவேந்திரன்

SHARE
ஏறாவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சார விஸ்தரிப்பு அபிவிருத்தி வேலைகளுக்காக பிரதி வியாழன் தோறும் இடம்பெறும் மின் துண்டிப்பு காலவரையறையின்றித் தொடரும் என்று ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலைய மின் அத்தியட்சகர் சி. சுவேந்திரன் தெரிவித்தார்.
ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் பிரிவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பிரதி வியாழக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்பு எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்று கேட்டபோது செவ்வாய்க்கிழமை 03.04.2018 அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
இதேவேளை நாளை (05.04.2018) வியாழக்கிழமை ஏறாவூர் நகர சபை நிருவாகத்திற்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இடம்பெறவிருப்பதால் வழமையான வியாழக்கிழமை மின் துண்டிப்பு இந்தவாரம் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களில் அடிக்கடி முன்னறிவித்தலின்றி  ஏற்படும் மின் தடையால் அனைவரும் அன்றாட அலுவல்களில் அதிக சிரமத்தை எதிர்நோக்குவதாக மின் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னறிவித்தல் ஏதுமின்றி அடிக்கடியும், சிலவேளை குறுகிய நேரமாகவும் சிலபோது ஒரு மணி நேரத்திற்குக் குறைவாகவும் அல்லது கூடுதலாகவும் இந்த மின் தடை ஏற்படுத்தப்படுவதாக மின் பாவனையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

சமீப சில காலங்களாக இரவு, பகல் பாராது திடீரென மின் தடைப்படுகின்றது.

தற்போது கடும் அனல் வெப்பக் காற்றுடன் புழுக்கமாகவும் இருப்பதால் மின் சாரமும் தடைப்படும்பொழுது மின் பாவனையாளர்கள் இன்னமும் அதிக அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

மேலும், எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதியிலிருந்து அடுத்து வரும் ஒரு மாத காலத்திற்கு பகல் முழுவதும் புனித றமழான் நோன்பை முஸ்லிம்கள் அனுஷ்டிக்கவுள்ளனர் என்பதுடன் இவ்வேளையில் வழமையான மின் துண்டிப்பும் இருக்குமாயின் மிகுந்த அசௌகரியத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: