உரமானியம் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு எட்டாக்கனி கவலையோடு விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத்தலைவர் கே.யோகவேள்
விவசாயிகளின் நலன் கருதி கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உர மானியத் திட்டத்தின் நன்மைகள் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகவே தொடர்ந்து இருந்து வருவதாக மட்டக்களப்பு உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத்தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை 28.03.2018 கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு நீர்ப்பாசன சிறுபோகச் செய்கையில் ஈடுபடும் எந்தவொரு விவசாயிக்கும் இதுவரை உரமானியம் வழங்கப்படாதது குறித்து விவசாயிகள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளார்கள்.
தற்போது சிறுபோக விதைப்பு இடம்பெற்று 15 நாட்கள் கடந்து விட்டன.
உண்மையில் விதைப்பு இடம்பெறுவதற்கு முன்னதாகவே உரிய வேளையில் கிடைக்க வேண்டும். இல்லையேல் அது பிரயோசனமற்ற ஒன்றாக மாறிவிடும்.
உன்னிச்சைக் குள நீர்ப்பாசனத்தை நம்பி நெற்செய்கையில் ஈடுபட்ட ஆயித்தியமலை கமநல அபிவிருத்தி அலுவலகத்தின் கீழ் நிருவகிக்கப்படும் சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் நெற் காணிகளுக்கு இதுவரை உர மானியம் கிடைக்கப்பபெறவில்லை.
இது போன்று மாவட்டத்தின் ஏனைய பல கமநல சேவைப் பிரிவு விவசாயிகளுக்கும் உரமானியம் கிடைக்கப்பெறவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக 24 ஆயிரம் ஹெக்ரேயர் நிலப்பரப்பில் சிறு போக நீர்ப்பாசன நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இது குறித்து விவசாய அமைச்சரும் அதிகாரிகளும் அசமந்தப் போக்கில் இருப்பது கவலையளிக்கிறது.
இது தொடர்பாக நாம் விவசாய அமைச்சர் தொடக்கம் உயரதிகாரிகள் வரை எல்லோருக்கும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் கவலையை வெளிப்படுத்தியுள்ளோம்.
மட்டக்களப்பு விவசாயிகள் உர மானியத்தில் மட்டுமல்ல, நெல் அறுவடைக் கொள்வனவிலும் முற்று முழுவதுமாகப் புறக்கணிக்கப்படுவதால் மாவட்ட விவசாயிகள் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த நிலைமை தொடருமாயின் மட்டக்களப்பு மாவட்டம் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுவதோடு மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் இழப்புக்களைத் தாங்கிக் கொள்ள முடியாத நெருக்கடி நிலையில் விபரீதமான முடிவுகளையும் எடுக்கக் கூடும்.
எனவே, இது குறித்து விவசாய அமைச்சரும் அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் கடன்பட்டு அதிக விலைக்கு உரம் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த உர மானியம் விதைப்புக்கு முன்னரே வழங்கப்பட்டிருக்க வேண்டியது.
அரசாங்கம் ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்கு 5000 ரூபாவை உரமானியமாக வழங்குகின்றது. ஆகக் கூடியது ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கருக்கே உரமானியம் கிடைக்கும்.
தற்போது தனியார் உர வியாபாரிகள் 50 கிலோகிராம் உரப்பையை 3500 ரூபாவுக்கு விற்பனை செய்து வருகின்றார்கள்.
0 Comments:
Post a Comment