முஸ்லிம் சமூகத்திற்கெதிராக அம்பாறை, கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் தூண்டிவிடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை 06.03.2018 மாலை மனித சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது.
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் அழைப்பின் பேரில் இந்த மனித சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டோர் இந்த நாட்டின் சுதந்திரம், பொருளாதாரம் பாதுகாப்பு உட்பட தொன்று தொட்டு முஸ்லிம்கள் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்தும் மற்றும் சகல இனங்களுக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சமத்துவமாக வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் சட்டம் ஒழுங்கு பாகுபாடின்றி நிலைநாட்டப்பட வேண்டியதை வலியுறுத்தியும் பதாதைகள் ஏந்தியிருந்தனர்.
முன்னதாக மனித சங்கிலிப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக சில மணித்தியாலங்கள் கடைகளை மூடி வைக்குமாறும் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை ஏறாவூரில் மனித சங்கிலிப் போராட்டம் அனுஷ்டிக்கப்பட்ட போதும் அரச அலுவலங்கள், பாடசாலைகள், உள்ளுர் மற்றும் தூர இடங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் என்பன வழமை போல் இயங்கின.
பிரதேசத்தில் வன்முறைகள் ஏதும் நிகழாவண்ணம் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
0 Comments:
Post a Comment