ஏறாவூர் பொலிஸ் பிரிவின் இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரு வேறு குற்றச் செயல்களில் ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டும் மற்றொரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுமுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 18.03.2018 ஆகிய இரு தினங்களில் இடம்பெற்ற இச்சம்பவங்கள் பற்றி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் ஓடாவியார் வீதியை அண்டியுள்ள வீட்டின் முன்னால் தாழ்வாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு ஞாயிற்றுக்கிழமை 18.03.2018 அதிகாலை 3.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
எனினும் வீட்டுக் காரரான எம். அப்துல் றஹ்மான் என்பவர் அதிகாலைத் தொழுகைக்காக விழித்துக் கொண்டதும் மோட்டார் சைக்கிளில் இருந்து புகை கிளம்புவதைக் கண்டு துரிதமாகச் அவர் செயற்பட்டு தீ பரவாமலும் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாமலும் தீயை அணைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சிசிரிவி காணொளிக் கமெராவின் உதவியுடன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞனைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
இதேவேளை சந்திவெளிப் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ரக கறுப்பு மற்றும் பச்சை நிறமுடைய சி.பி. பிஎப்எக்ஸ் 8689 இலக்க மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
திருட்டுப்போன இந்த மோட்டார் சைக்கிளைப் பற்றிய ஏதேனும் தகவல்கள் இருக்குமாயின் ஏறாவூர் பொலிஸாரின் 065 2240487 எனும் தொலைபேசி இலக்கத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
0 Comments:
Post a Comment