கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய அளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் தெரிந்துகொள்ள முடிகின்றது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகமவிற்கு இந்து சம்மேளனம் அவசர கடிதம் ஒன்றை திங்கட் கிழமை (26) அனுப்பியுள்ளது. கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு கூடிய விரைவில் நேரம் ஒதுக்கித்தருமாறு இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அதில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்து சம்மேளனத்தின் ஊடகப் பிரிவு தெரித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….
குறிப்பாக பட்டிருப்பு கல்வி வலயத்தில் அதி கஷ்ட,கஷ்ட பிரதேச பாடசாலைகளில் சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக யுத்த காலத்தில் ஆசிரியர் சேவையினை உயிரினை துச்சமாக மதித்து சேவையாற்றிய ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் பலர் தமது கஷ்ட பிரதேச சேவையினை நிறைவு செய்து மீண்டும் நகர்புறப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று ஓரிரு வருடங்களின் பின்னர் வெளி வலயத்தில் சேவையாற்றவில்லை என்ற ஒரே காரணத்தினால் மீண்டும் மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா வலயங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆசிரியர்களின் பெயர்கள் இணையத்தளத்தில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள பல கல்வி வலயங்களில் இதுவரைக்கும் கஷ்ட பிரதேசங்கள் தெரியாதவகையில் பலர் நகர்ப்புறப் பாடசாலைகளில் ஆசிரியர்களாக சேவையாற்றி வருவது அதிகாரிகளின் கண்களுக்கு புலப்படாத விடயமாக இருந்து வருவது கவலையளிப்பதாகவுள்ளது.
பட்டிருப்பு கல்வி வலையத்திலுள்ள எல்லைக் கிராமங்களாகிய சின்னவத்தை, வெல்லாவெளி கிராமம் என்பது மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் எல்லைக் கிராமங்களாகும். இக்கிராமங்களுக்கு யுத்த காலங்களில் பிரயாணம் மேற்கொள்வது மிகவும் கடினமானதொரு விடயமாகவிருந்தது. அவ்வாறான கடினமான காலகட்டங்களில் ஆசிரியர்கள் ஆற்றிய அரும்பணி கணக்கிலெடுக்கப்படாமல் அதிகாரிகள் அசட்டையாக செயற்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குறியது.
ஏற்கனவே முன்னாள் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கடந்த பல வருடங்களாக தமிழ் ஆசிரியர்கள் இடமாற்றம் என்ற பெயரில் பந்தாடப்பட்ட வேளையில் இந்து சம்மேளனம் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தது. அதன்பின் முதலமைச்சர் இந்து சம்மேளனத்திற்கு அனுப்பிய பதில் கடிதத்தில் தாம் இன ரீதியாக செயற்படவில்லை என்று தெரிவித்திருந்தார். ஒரு குறுகிய இடைவெளிக்குப்பின் மாகாண கல்விப் பணிப்பாளர் உரிய விசாரனைகள் இன்றி தமிழ் ஆசிரியர்களை மீண்டும் பந்தாடி வருவதானது கடும் கண்டனத்திற்குரியது. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment