12 Dec 2017

விபத்து வேளைகளில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் விரைந்து பணியாற்ற வேண்டும். சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் சிந்தக பீரிஸ்

SHARE
விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்ற வேளைகளில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் மனிதாபிமானத்துடன் விரைந்து பணியாற்ற வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்காக அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் தனது வேண்டுகோளில் மேலும் தெரிவித்ததாவது, வீதி விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதில் முச்சக்கரவண்டிச் சாரதிகள் மிக அவதானமாய் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

வேகம் உயிர் பறித்து இழப்புக்களை எற்படுத்தக் கூடியது. அதேவேளை, விவேகம் ஆக்கபூர்வமானது அனைவரையும் ஆபத்திலிருந்து பாதுகாக்கக் கூடியது.
இருப்பினும் சம காலத்தில் வீதி விபத்துக்கள் கவனயீனத்தால் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அவ்வேளையில், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்ப்பிப்பதில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் தீவிரம் காட்ட வேண்டும். உயிர் காப்பு நடடிக்கையில் பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

படுகாயமடைந்தவர்களை உடனடி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சேர்ப்பித்து அவர்களுக்கு முடிந்தளவு உதவி ஒத்தாசை வழங்கி முச்சக்கர வண்டிச் சாரதிகள்  தங்களது உச்சக்கட்ட மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும்.
பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவரின் பின்னணி பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எவராக இருந்தாலும் உடனடியாக உயிர் காப்பு என்பது முக்கியம்.

காயமடைமந்தவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்தார் என்பதற்காக எவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கழுத்துக்குள்ளாலோ கண்களைத் துளைத்துக் கொண்டோ காயம் ஏற்பட்டால் காயத்தை எற்படுத்திய பொருட்களை ஒரு போதும் உதவிக்கு விரைபவர்கள் அகற்றுவதற்கு முயற்சிக்கக் கூடாது.

வைத்தியசாலை அதிகாரிகளோ அலுவலர்களோதான் அதனைச் செய்ய வேண்டும். முச்சக்கர வண்டிச் சாரதிகள் ஒருபோதும் வைத்தியர்களின் அல்லது தாதியர்களின் கடமையைச் செய்ய முற்படக் கூடாது.

மேலும் விபத்து, இடர் ஏற்படும் ஆபத்து வேளைகளில் உதவுபவர்களில் முதலாமவர்களாக முச்சக்கர வண்டிச் சாரதிகள் திகழ வேண்டும்” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: