சமுர்த்தி மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்திற்கென வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட விளாவட்டவான் கிராமத்திற்கு இதுவரை சுமார் 70 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி. குணரெட்ணம் தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளாவட்டவான் கிராமத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 05.07.2017 நடைபெற்ற கருத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில், கிராம அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக தொழில் துறையில் ஆர்வமுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மீள அறவிடப்படாத முழு மானிய அடிப்படையில் சுயதொழில் வாய்ப்பினை வழங்கி அவர்களை மேம்படுத்துவதே இத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கு எமது திணைக்கள உத்தியோகத்தர்கள் விசேட கவனம் செலுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இவர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் மிக விரைவில் வழங்கிவைக்கப்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் வவுணதீவு, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் சமுர்த்தி உற்பத்தி மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் விவசாயம், மீன்பிடி, சந்தைப்படுத்தல், சிறுகைத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட 163 திட்டங்களுக்காக 67 இலட்சத்தி 35,000 ரூபாவும் மற்றும் இரண்டு வீடுகளின் புனரமைப்பு வேலைகளுக்காக 3 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
இவ் அபிவிருத்தி திட்டத்திற்கு உட்கட்டமைப்பு வேலைகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி போன்றவைகளுக்கு எதிர்காலத்தில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மேலும் நிதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment