மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள வளாகம் துப்பரவு செய்யும் சிரமதானப் பணி திங்கட்கிழமை 03.07.2017 பிரதேச மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறைகள் அனைத்தும் இலங்கை பாதுகாப்பு படையினரால் அழிக்கப்படிருந்தது.
கல்லறைகளை அழித்து அவ்விடத்தில் தென்னை மரங்களை நட்ட இராணுவத்தினர் அவற்றைப் பராமரிக்காத காரணத்தில் தென்னங் கன்றுகள் கருகி மடிந்தன.
அப்பகுதி அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டது.
திங்களன்று மேற்கொள்ளப்பட்ட சிரமதானத்தில் கண்டலடி, புளியங்கண்டலடி, வாகரை, பால்சேனை, கதிரவெளி ஆகிய கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து காடுமண்டிக் கிடந்த மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியிலுள்ள பற்றைக் காடுகளை வெட்டி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வாகரை கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்குரிய ஜே.சி.பிகனரக வாகனம் மற்றும் உழவு இயந்திரங்களை கொண்டும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இணைந்து குறித்த இடத்தை சுத்தப்படுத்தினர்.
சிரமதானப் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர் எஸ். நடராஜா, ஞா. கிஸ்ணப்பிள்ளை ஆகிய அரசியல்வாதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
சிதறிக் கிடந்த சுமார் 50க்கு மேற்பட்ட கல்லறைகள் கண்டெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு உரிய இடத்தில் நிரையில் நட்டுவைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment