24 Feb 2017

சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் மற்றும் புனரமைப்புச் செய்யப்பட்ட கிராமம் கையளிப்பும்

SHARE
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தங்களது தொழில்களை இழந்த சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கல், புனர்வாழ்வு அமைச்சினால் புனரமைப்புச் செய்யப்பட்ட கிராமம் கையளிப்பு ஆகிய நிகழ்வுகள் மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெறவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்
ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை ஆரம்ப நிகழ்வுகளுடன் கண்காட்சி ஆரம்பமாகி  திங்கட்கிழமை வரை மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில்  நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஓழுங்கமைப்பு வேலைகளில் மாவட்ட திட்டமிடல் செயலகம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும்     ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 9.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையில் நடைபெறும்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின் புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என்.பத்மநாதன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொள்கிறார்.

சிறப்பு அதிதிகளாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், அலிசாகிர் மௌலானா உள்ளிட்டோரும் கௌரவ அதிதிகளாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.பி.சி.விக்கிரமசிங்க,   புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன், புனர்வாழ்வு அதிகாரசபையின் செயற்பாட்டு பணிப்பாளர் என்.புகேந்திரன், மேலதிக பணிப்பாளர் எஸ்.எம்.பகுர்தீன், பிரதிப்பணிப்பாளர் வி.குசைன், உதவிப்பணிப்பாளர்களான டி.எம்.ஜி.கயந்த திசாநாயக்க, ஜே.பி.சாந்த பத்மசிறி, எம்.தர்மகீர்த்தி, பணிப்பாளர்களான ஆர்.தர்மகுலசிங்கம், கலாநிதி.ஏ.எம்.முபாரக், கலாநிதி அசோக கஸ்துராய்ச்சி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நட்டஈடுகள் யாவும் கொழும்பில் வைத்து வழங்கப்பட்டு வந்த நிலையில் அரசாங்க அதிபரின் வேண்டுகோழுக்கு இணங்க பாட்டாளிபுரம் மைதானத்தில், கடந்த கால யுத்தம் காரணமாகப்பாதிக்கப்பட்டு உயிரிழந்த 30 பேர், சொத்து இழப்பினை எதிர் கொண்ட அரச உத்தியோகத்தர்கள் 35, பாதிக்கப்பட்ட 10 வணக்கத் தலங்கள், 30 பொதுச் சொத்து அழிவுகளுக்குமாக 105 பேருக்கு 75 லட்சத்து 43ஆயிரத்து 603 ரூபாக்கான நட்ட ஈட்டுக் காசோலைகள் வழங்கப்படவுள்ளன.

அதே நேரத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தில் சுயதொழில், சுயதொழில் பயிற்சிகள், வீடுகள் அமைத்தல், கைத்தொழிலில் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக 521 பேருக்கு 7 கோடியே 4 லட்சத்து 82 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை புனர்வாழ்வு அதிகார சபையினால் இதுவரையில்  17628 பேருக்கு 629 கோடியே 38 ஆயிரத்து 715 ரூபா இழப்பீடுகளாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில் வடக்கு கிழக்கு மாகாணங்களின்  மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட 8 மாவட்டங்களையும் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.

சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்பினை மேம்படுத்தும் வகையிலும் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் புனர்வாழ்வு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வுகளை அடுத்து புனர்வாழ்வு அமைச்சின் நிதியில் 7.5 மில்லியன் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட வவுணதீவு நெல்லூர் கிராமம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. இதில், பல்தேவைக்கட்டடம், வீதி புனரமப்பு, 2 கல்வெட்டுகள் அமைத்தல், நீர்ப்பாசன வாய்க்கால் புனரமைப்பு,   சிறுவர் பூங்கா, முன்பள்ளி புனரமைப்பு, விளையாட்டு மைதானம் புனரமைத்தல் உள்ளிட்ட 8 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

SHARE

Author: verified_user

0 Comments: