(இ.சுதா)
பாடசாலைகளில் மதம் சார்பான விழாக்களை நடாத்துவதன் நோக்கம் கலாசார விழுமியங்களை மாணவர்களிடையே கட்டியெழுப்பவது மாத்திரமன்றி இன ஒற்றுமை தேசிய ஐக்கியம் சமூக ஒற்றுமையினை மாணவரிடையே சிறுபராயம் தொடக்கம் ஏற்படுத்தி அதன் ஊடாக முறையான சமூகக் கட்டமைப்பினை ஏற்படுத்துவதாகும். இதற்கான
அங்கிகாரத்தினை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. பாடசாலை ஒன்றில் மூவின கலாசாரத்தினை பின்பற்றுகின்ற மாணவர்கள் கல்வி கற்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் சார்ந்த விழாக்களை கொண்டாடுவதற்கு தடை இல்லை ஆனால் ஒரு சில பாடசாலைகளில் இவ்வாறான நிலைமை இல்லை இது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தடையாக அமைகின்றன.
என மண்முனை தென் எருவில் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் வீ.திரவியராஜா தெரிவித்துள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையார் ஆட்சிக் காலம் தொடக்கம் தேசிய நல்லிணக்கம் உதயமாகி இன்று வரைக்கும் கல்வித் திட்டத்தில் அவை தொடர்பான விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. பல்லினக் கலாசாரத்தினை பின்பற்றும் எமது நாட்டில் இந்து பௌத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய நான்கு இனத்தினைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் கலாசார நிகழ்வினை பங்குகொள்வதற்கு உரிமையுண்டு அதனை தடுப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
ஓளிவிழா பாடசாலைகளில் கொண்டாடப்படுவதன் நோக்கம் தேசிய ஒற்றுமையினை ஏற்படுத்துவதாக அமைகின்ற போதிலும் அனைவரது வாழ்விலும் ஒளியினை ஏற்படுத்துவதாகும். இயேசுபிரான் பற்றி பலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இயேசு ஒரு மகான் என்றும், மனித பிறப்பு என்றும் பலர் விமர்சிக்கின்ற நிலையில் கிறிஸ்தவ மதம் இயேசு பிரான் கடவுள் அவதாரம் என்று கூறுகின்றனர். கிறிஸ்தவர்களின் கடவுள் இயேசு பிரான் இவர் மண்ணில் முப்பது மூன்று அரை வருடங்கள் வாழ்ந்திருக்கின்றார். அவர் வாழ்ந்த காலத்தில் சமூகத்திற்கு செய்த சேவையினை நினைவு படுத்தும் நோக்கில் இவ்விழா கொண்டாடப்படுகின்றன அனைவர் வாழ்விலும் ஒளியினை ஏற்படுத்துவதற்காகவே ஒளிவிழா நிகழ்வு நினைவூட்டுவதாக தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment