2 Dec 2016

உணவகத்தில் தீ ! சுமார் 4 இலட்சம் ரூபாய் நஷ்டம்!

SHARE
மட்டக்களப்பு, காத்தான்குடி வர்த்தக நகரில் உணவகம் ஒன்று நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்துள்ளதான முறைப்பாடு வெள்ளிக்கிழமை(02) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி-06, நூராணியா மையவாடி வீதியில் உள்ள உணவகமே இவ்வாறு தீப்பற்றியதால் எரிந்து நாசமாகியுள்ளது.

வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் தனது  உணவகத்தை தான் மூடிவிட்டு சென்றதாக உணவக உரிமையாளரான முஹம்மத் தௌபீக் தெரிவித்தார்.
எனினும் சற்று நேரத்தில் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் உணவகம் தீப்பற்றி எரிந்ததை அயலவர்கள் அவதானித்து தனக்கு அறிவித்ததாகவும் அவர் கூறினார்.

அச்சமயம் தீயை அணைக்க  பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டபோதும் அது முடியாமற் போனதால் உணவகத்தில் இருந்த குளிரூட்டிகள், தளபாடங்கள் மற்றும் பொருட்கள் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இதனால் சுமார் 400,000 ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




SHARE

Author: verified_user

0 Comments: