இனப்பிரச்சினை இதய சுத்தியோடு தீர்க்கப்படவில்லை என்றால் பாரிய சவாலை இந்த நாடு எதிர்கொள்ளும் என்ற யதார்த்தத்தை நாங்கள் உரத்துக் கூறாமலிருக்க முடியாது என
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
திங்களன்று (ஓக்ரோபெர் 24, 2016) மட்டக்களப்பு-பதுளை வீதி கரடியனாறில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய கிழக்கு முதலமைச்சர் @ “இந்த நல்லாட்சிக் காலகட்டத்திலே புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான சிறந்ததொரு தீர்வு கிடைக்கவில்லை என்று சொன்னால் இன்னும் அரை நூற்றாண்டு சென்றாலும் அரசியல் அதிகாரப் பங்கீடு கிடைக்காத துரதிருஷ்டம் தொடரும் அதேவேளை இலவு காத்த கிளிபோல சிறுபான்மைச் சமூகங்களை ஆட்சியாளர்கள் இருக்க வைத்தால் பாரிய சவாலை இந்த நாடு எதிர்கொள்ளும்.
நான் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்ற விடயம் கிழக்கு மாகாணத்திலே வேறு ஒரு புரட்சி நிகழலாம். அது ஆயுதப் புரட்சியாக அல்ல, வறுமைப் புரட்சியாகக் கூட அது இருக்கலாம். தொழிலில்லாத இளைஞர் யுவதிகள் வறுமைக்கான தமது போராட்டத்தை ஆரம்பிக்கலாம்.
ஆகவே கசப்பான வரலாறுகளை மேலும் தொடர விடாமல் அதிகாரப் பகிர்வின் மூலம் அபிவிருத்திகளை மேற்கொண்டு நாட்டில் சமத்துவத்தைப் பேண அரசு முயற்சிக்க வேண்டும்.
கடந்த மூன்று தசாப்த காலமாக இனப்பிரச்சினைத் தீர்வு இழுத்தடிப்பு என்கின்ற வரலாறுகள் எங்களுக்கு ஒரு கசப்பான உண்மையை நினைவு கூறிக்கொண்டிருக்கின்ற விடயம் இனியும் தொடரக் கூடாது.
அதற்காக இந்த நாட்டின் அத்தனை அரசியல் தலைமைகளும் ஒன்று பட்டு அரசியல் தீர்வை உடனடியாக அமுல்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இனவாத நஞ்சை அகற்றுவதற்காக அரசியல் தலைமைகள் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. கிழக்கு மாகாணத்திலே இன ஒற்றுமை எனும் விடயத்தை நாங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் இணைந்து இந்த நாட்டுக்கு முன்னுதாரணமாக சாதித்துக் காட்டியிருக்கின்றோம்.” என்றார்.
இந்நிகழ்வில் இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment