சிறுமியைக் கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்த சந்தேக நபருக்கு ஓகஸ்ட் 2 வரை விளக்கமறியல்.
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி திருச்செந்தூர் கிராமத்திலிருந்து கடந்த வாரம் காணாமல் போன 13 வயதுச் சிறுமியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹற்றன் நீதிவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
ஹற்றன்- மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டிப் பகுதியில் சிறுமி மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது புதன்கிழமை (ஜுலை 27, 2016) மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட களனி எஸ்டேட், மஸ்கெலியா என்ற இடத்தைச் சேர்ந்த இந்திரன் விஜயன் (வயது 21) வியாழக்கிழமை மஸ்கெலிய பொலிஸாரால் ஹற்றன் நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர் ஏற்கெனவே பல “சம்பிரதாயத் திருமணங்களைச்” செய்துள்ளவர் என்றும் அவருக்கு அந்த குடும்ப வாழ்க்கைகளின் மூலம் குழந்தைகள் உள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர் மட்டக்களப்புக்குச் சென்று குறித்த சிறுமியை ஆசை வார்த்தைகளைக் காட்டி அழைத்துச் சென்று அவருடன் சில தினங்கள் பொழுதுகளைக் கழித்துள்ளார் என்பதும் தெரியவந்திருக்கின்றது.
மீட்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment