6 Jun 2016

சிறுமிகள் சித்திரவதை சிறிய தந்தைக்கு ஜுன் 15 வரை விளக்கமறியல்

SHARE
சிறுமிகள் இருவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபரான அச்சிறுமிகளின் சிறிய தந்தையை ஜுன் 15 வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான்
நீதிமன்ற பதில் நீதிவான் எஸ். தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

தமக்கு தமது சிறிய தந்தையும் சித்திரவதை செய்ததாக சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின்படி ஏறாவூர் பொலிஸார் மேற்படி சந்தேக நபரை (வயது 32) 04.06.2016 கைது செய்து   ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் 05.06.2016 ஆஜர்படுத்தியபோது 15.06.2016 வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறுமிகளின் சிற்றன்னை (48 வயது) ஏற்கெனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவருக்கு 4 மாத கைக்குழந்தை இருப்பதன் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சகோதரிகளான சிறுமிகள் இருவர் கடும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை 01.06.2016 ஏறாவூர் முகாந்திரம் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சையுடன் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின்படி தமது சிற்றன்னையின் கணவரும் தமக்கு தொடர்ந்து பல்வேறான தாக்குதல்களையும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் இழைத்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

தேநீருக்குள் உப்புக்; கலந்தும் உணவில் உண்ணமுடியாதளவுக்கு மிளகாய்த் தூள் கலந்தும் தந்ததோடு நடு நிசிகளிலும் தங்களை நித்திரையிலிருந்து அடி ஆக்கினைகள், மற்றும் சூடு வைத்து எழுப்பி வீட்டு வேலைகளைச் செய்யுமாறு பணித்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்த சிறுமிகள் நீண்டகாலமாக பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சிறுமிகளின் தாய் வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். தந்தை அவரது தாயுடன் பொலொன்னறுவையில் வாழ்ந்து வருகின்றார். தாய் வெளிநாடு செல்லும்போது இந்தச் சிறுமிகளை சிற்றன்னையிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றதாக சிறுமிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: