23 Apr 2016

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பதின்மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பற்சிகிச்சைப் பிரிவுக்கு புதன்கிழமை மாலை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 13 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பெறுமதியான நவீன உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இந்த உபகரணங்கள் கிடைத்துள்ளன.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பற்சிகிச்சைப் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் ஸீனா மிஸ்கீனிடம் இந்த உபகரணத் தொகுதியை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சிறுவர் பிரிவுக்கான சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் ஹஷித்த லியனாராச்சி, காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட் லெவ்வை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் டாக்டர் மாஹிர், வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த உபகரணத் தொகுதி கிடைத்திருப்பதன் மூலம் காத்தான்குடி, புதிய காத்தான்குடி மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் பற்சிகிச்சை சுகாதார சேவையை இலகுவாக பெற முடியும் என வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கையளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது சம்மந்தமாகவும்  350 ஊழியர்கள் தேவைப்பட்டபோதும் 115 ஆளணியினரே காணப்படுவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
எதிர்காலத்தில் இதனை நிவர்த்தி செய்ய தன்னால் இயன்ற முழுப் பங்களிப்பினையும் செய்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் குறிப்பிட்டார்.





SHARE

Author: verified_user

0 Comments: