இலங்கையில்
அண்மைய அபிவிருத்திகளை வரவேற்றுள்ள இந்தியா தனது அயல்நாட்டுடன் சிறந்த
நட்புறவைப் பேணவுள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கையுடன் நாம் சிறந்த ஒரு
நட்புறவைப் பேண விரும்புகின்றோம் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்
செய்யித் அக்பர்தீன் தெரிவித்தார்.
குறித்த கால இடைவெளிகளில் இலங்கை ஒரு
ஆரோக்கியமான ஜனநாயக மாற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள இந்த
ஜனநாயக நடைமுறையை நாம் வரவேற்கிறோம் எனவும் அக்பருத்தீன்
தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால
சிறிசேன அவர்கள் தெரிவு செய்யப்பட்டதும் வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு புதிய
ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்ததாகவும் வெளிவிவகார அமைச்சின்
பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்தியா இலங்கையின் நீண்டகால நெருங்கிய
நட்பு நாடு எனக் குறிப்பிட்டிருந்த இந்தியப் பிரதமர், இலங்கையின் அமைதி,
அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்துக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு
வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் சமாதானத்தையும்
ஸ்திரத்தன்மையையும் இந்தியா விரும்புவதாக தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார
அமைச்சின் பேச்சாளர் இலங்கையில் வாழும் சகல சமூகங்களும் கௌரவமாகவும்
சமாதானமாகவும் வாழ்வதற்கேற்றவகையில் சகல தரப்பினர்களது கருத்துக்களையும்
புதிய அரசாங்கம் கவனத்திற்கொள்ளும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மேலும்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment