3 Dec 2014

கிழக்கு மாகாணசபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.

SHARE
கிழக்கு மாகாணசபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.

களேபரம் மற்றும் உறுப்பினர்கள் சமூகமளிக்காமையால், சபை அமர்வை தவிசாளர் ஆரியவதி கலப்பதி 2015ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதிவரை செவ்வாய்க்கிழமை (02)  ஒத்திவைத்தார்.

2015ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் நிறைவேற்றப்படாமலே, சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரவு -செலவுத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக கிழக்கு மாகாணசபை அமர்வு திங்கட்கிழமை (01) காலை ஆரம்பமாகியது.

ஆளும் தரப்பு உறுப்பினர்களின் பிரசன்னம் குறைவாக இருந்தமையால், சபை ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே சபை ஒத்திவைக்கப்பட்டது.    மீண்டும்  அன்று முற்பகல் 10.15 மணியளவில் சபை அமர்வு ஆரம்பமாகியது.

ஆளும் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் மாத்திரமே சபைக்கு சமுகமளித்திருந்தனர். இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியதால், சபை அமர்வு மீண்டும் சிறிதுநேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இருப்பினும், சிறிது நேரத்தில்  ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சமுகமளித்தனர். 2015ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, நடவடிக்கைகள் நடைபெற்றன.

மதிய போஷனத்துக்கு முற்பட்ட வேளையில், ஆளுநர் அலுவலகத்துக்கான நிதியொதுக்கீடு, பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கான நிதியொதுக்கீடு, மாகாணசபை நடவடிக்கைகளுக்கான நிதியொதுக்கீடு என்பன சமர்ப்பிக்கப்பட்டன. முதலைமைச்சரின் அமைச்சின் கீழ்வரும் உள்ளூராட்சி கிராமிய அபிவிருத்திக்கான நிதியொதுக்கீடுகளுக்கான பிரேரணை பிற்பகல் வேளையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கு காலம் தேவையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான அமைச்சர்கள் இருவரும் மற்றும் உறுப்பினர்கள் ஐவரும் கூறினர்.

ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் சபை அமர்வுக்கு  சமுகமளித்தனர். ஐ.தே.க. உறுப்பினர் தயா கமகே இந்தச் சபை அமர்வுக்கு சமுகமளிக்கவில்லை.

அதன் பின்னரே சபை அமர்வை தவிசாளர் ஆரியவதி கலப்பதி 1ஆம் திகதி இரவு 8 மணிவரை ஒத்திவைத்தார்.

சபை ஒத்திவைக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை வெளிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கே.துரைராஜசிங்கம், செங்கோலை தூக்கிக்கொண்டு ஓடுவதற்கு முயற்சித்தார். இதன்போது, அவையிலிருந்த ஆளும் கட்சி உறுப்பினர் செங்கோலை பாதுகாத்தார்.

அதன் பின்னரே சபை நடவடிக்கை  செவ்வாய்க்கிழமைவரை (02)  இரவு 8.45 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது. சபை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னரும் ஆளும் தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் சபைக்கு வெளியிலும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் நேற்றைய (01) நடவடிக்கைகள் பிற்போட்டமைக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததுடன், சபையின் தலைவரை மறித்து செங்கோலையும் தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசன்னா இந்திரகுமார் கருத்து

இது தொடர்பில் கிழக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமாரிடம் கேட்டபோது,  கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்டம் தோல்வியை தழுவும் நிலையில் திடீரென்று   சபை நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமைக்கு (02) ஒத்திவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபையால் 2015ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டம்; சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான விவாதம் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், திங்கட்கிழமை (01) இரவு  8 மணிவரை சபையை நடத்துவது என்றும் பின்னர் இரவே வாக்கெடுப்பு நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

திங்கட்கிழமை (01) இரவு 7 மணியளவில் ஆளும் தரப்பில் 11 உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளில் 15 உறுப்பினர்களுமே சபையில் இருந்தனர். இந்த நிலையில், வாக்கெடுப்பை நடத்தாது, சபையின் தவிசாளர் திடீரென்று சபையை ஒத்திவைத்தார். வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், கிழக்கு மாகாணசபையின் அடுத்த  ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

வரவு –செலவுத்திட்ட  விவாதத்தின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் ஆகியோர் ஆளும் தரப்பு வரிசையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணசபையில், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 22 பேரும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் 15 பேரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  
இதேவேளை, ஆளும் அணியைச் சேர்ந்தவர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அந்தக் கட்சித் தலைமைப்பீடத்தால் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,  கிழக்கு மாகாணசபையில் தனித்து இயங்கப்போவதாக திங்கட்கிழமை (01) சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை (02) சபைக்கு சமுகமளிக்கவில்லை.
SHARE

Author: verified_user

0 Comments: