நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது சர்வாதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும்
இடையிலான போராட்டமாகும். இதில் மஹிந்த ராஜபக்ஷ வெல்லுவாரா அல்லது
மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவரா என்பதனை விடவும் ஜனநாயகம் வெற்றி
பெறப்போகிறதா அல்லது சர்வாதிகாரம் வெற்றி பெறப் போகின்றதா என்பதனை அனைத்து
மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். என சம்மாந்துறைத் தொகுதி ஐக்கிய
தேசியக் கட்சியின் அமைப்பாளர் எம்.ஏ. ஹஸனலி தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு
ஆதரவு தெரிவித்து சம்மாந்துறை கல்லரிச்சல் பிரதேசத்தில் நேற்று மாலை
சனிக்கிழமை (13) இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே,
மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார போக்கு காரணமாக நாட்டில் ஜனநாயக நடைமுறைக்கு
சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. சுயமாகவும் தலையீடுகள் எதுவுமின்றி
செயற்படவேண்டிய நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்ருக்கின்றது. மனித
உரிமைகள், மக்களின் அடிப்படை உரிமைகள், ஊடக சுதந்திரம், பேச்சுச்
சுதந்திரம் என்பன மிகவும் தந்திரோபாயமான முறையில் குழிதோண்டி
புதைக்கப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரத்தின் பயன்படுத்தி நாட்டின் அரசியல், பொருளாதாரம்,
அபிவிருத்தி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான பாதுகாப்புத்துறை என்பவற்றில்
குடும்ப ஆதிக்கம் விரிவுபடுத்தப்பட்டு ஊழலும் மோசடிகளும் நாட்டில்
என்றுமில்லாதவாறு தலையெடுத்துள்ளது.
அரசாங்கம் இன்று சிங்கள மக்கள் வாக்களித்தால் போதும் என்ற துணிவிலே மஹிந்த
அரசு காய்நகர்த்தல்கள் இடம்பெற்ற வருகின்றன. ஆனால் அரசின் சர்வாதிகாரப்
போக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் ஏதேச்சதிகாரத்தை
நோக்கிய மஹிந்த அரசின் போக்கும் ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாமல் செய்ய
வேண்டும். என்ற சிந்தனை போக்கும் அரசன் செயற்பாட்டையும் மாற்ற வேண்டும்
என்ற கோஷம் சிங்கள அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் உருவாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் கட்சிக்குள்ளிருந்தே அவருக்கு எதிராக பொது
வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன உருவாகியிருப்பது எமது நாட்டு அரசியல்
வரலாற்றில் அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகின்றது.
குடும்ப ஆட்சியை தகர்த்து 225 மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரங்களை வழங்கி
நாடாளுமன்றத்துக்கு பதில்கூறும் ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்தி நிறைவேற்று
அதிகாரத்தை ஒழித்து ஜனநாயகத்தை கட்டியெழப்பவே பொது எதிரணிகளின் வேட்பாளராக
மைத்திரிபால சிறிசேன அன்னச் சின்னத்தில் களமிறங்கியுள்ளார்.
இன்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் ஒன்றிணைந்திருப்பது மஹிந்த
ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவதற்காகவே நாட்டின் நலனுக்காக
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புக்கள்
ஒண்றினைந்துள்ளது. எமது நாட்டின் முதன்முறையாக பிரதான இரண்டு தேசியக்
கட்சிகளும் தேசிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படவேண்டும். ஜனநாயகத்தையும், மக்களின்
சுதந்திரத்தையும் பறிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய
அரசியல் கலாசாரத்தை இல்லாதொழித்து மைத்திரிபால சிறிசேனவின் கீழ் ஓர்
தூய்மையான ஆட்சியினை அமைக்க நாட்டு மக்களுக்கு சரியான சந்தர்ப்பம்
கிடைத்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பம் மிகவும் பெறுமதியானது. நாட்டின் போக்கினை மாற்றியமைக்க
இதுவே சரியான தருணமாகும். இதனை நாட்டு மக்கள் தவறவிடக்கூடாது.
எனவே, மைத்திரிபாலவின் வெற்றி நாட்டின் ஜனநாயகம் வலுப்பெறுவதற்கு உந்து
சத்தியாக அமையும். அதற்காக நாட்டு மக்கள் அனைவரும் இத்தேர்தலை கட்சி,
நிறம், மதம், இனம் ஆகிய பேதங்களை மறந்து ஜனநாயகத்தை மீளமைக்க அன்னச்
சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். என்றார்
இக்கருத்தரங்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment