12 Nov 2014

தமது பன்முகப் படுத்தப்பட்ட நிதியில் சிறிதளவேனும் திறைசேரிக்குத் திரும்பவில்லை – அரியம் எம்.பி

SHARE
பிரதியமைச்சர் பிரபா கணேசன் இலங்கை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலையில் சமையல் காரராகவும், உணவு உபசரிப்பாளராகவும், செயற்பட்டு வருகின்றார் என்பது பற்றி இப்போதுதான் எமக்கும் தெரிய வந்துள்ளது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் கூறினார்.

தொலைத் தொடர்பு தொழில் நுட்ப பிரதியமைச்சர் பிரபா கணேசன் கடந்த 05.11.2014 அன்று மட்டக்களப்பு மாவட்டம்  போரதிவுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மண்டூர்-13 விநாயகர் வித்தியாலயாலயத்தில் தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்; 45 லெட்சம் ரூபாய் செலவில் நிருமாணிக்கப்பட்ட கணணி ஆய்வு கூடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

அதன்போது அவர் குறிப்பிடுகையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற  உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்தும் அமர்வுகளில், கலந்து கொள்ளாமல் நாடாளுமன்ற சிற்றுண்டிச் சாலையிலே மணித்தியாலக் கணக்கிலே உட்கார்ந்து கொண்டு நேரத்தைக் கழிக்கின்றார்கள், அவர்களை நாடாளுமன்றத்திற்குள் பார்க்க முடியாது சிற்றுண்டிச் சாலையிலேதான் காணலாம். அவர்களது பன்முகப் படுத்தப்பட்ட நிதி இங்குள்ள மக்களுக்குப் பயன்படாமல் மீண்டும் திறைசேரிக்கு திருப்புகின்றது. இதனை இங்குள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் உண்மை. என தெரிவித்திருந்தார்.

மேற்படி பிரதியமைச்சரின் கருத்தின் உண்மைத் தன்மை பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரனிடம் இன்று பதன்கிழமை (12) வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…….




தற்போதைய நாடாளுமன்றத்தின் இறுதிக் காலகட்டத்தில் இலங்கை அரசின் 110 வது பிரதி அமைச்சராக பிரபா கணேசன் பதவி ஏற்றிருக்கின்றார்.


பிரபா கணேசனின் அரசியல் வரலாறு எமக்கு நன்கு தெரியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களைப் பற்றிக் கதைப்பதற்கு பிரபாவுக்கு எந்தவித அருகதையுமில்லை, அவர் ஒரு பலமில்லாத பிரதியமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மட்டக்களப்பிற்கு வருகை தந்து உதவாத கதைகளைக் கூறிச் சென்றுள்ளமை அவருக்கும், அவரது அரசாங்கத்திற்கும் ஆரோக்கியமாக இருக்கலாம் அனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பற்றிக் கதைப்பதற்கு பிரபாவிற்கு எந்த விதமான அருகதையுமில்லை. என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்கின்ற பன்முகப் படுத்தப்பட்ட நிதியினை எமது மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கு வழங்கி  வருகின்றோம்.  இந்நிலையில் எமது பன்முகப் படுத்தப்பட்டுள்ள நிதி சிறிதளவேனும் திறைசேரிக்குத் திரும்பவில்லை.  இந்த விடையத்தினை பிரபா கணேசன் மிகவும் கவனமாக அறிந்து கொள்ள வேண்டும்.


தமிழ் மக்களின் உரிமைகள், அபிலாசைகள், தொடர்பாகவும், தமிழ் மக்களுக்கு ஏற்படும் அநீதிகள் தொடர்பாகவும் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல் என்றால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடையதுதான். இதனை பிரபா கணேசன் இதுவரை கண்டிராதது எமக்கு வேடிக்கையாகவுள்ளது.


பிரபாக கணேசன் முதலில் மலையக மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அந்த மக்களின் அவலங்களைத் துடைக்க ஜனாதிபதியிடம் சென்று வழி வகைகளை மேற்கொள்ள வேண்டும். இது தற்போதைய தேவையுமாகும்.


இதனைச் செய்யாமல் பலரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றிக் கதைக்கிறார்கள் என்பதற்காக இந்தப் பிரபா கணேசனும் கதைப்பது என்பது பொருத்தமல்ல என்பதை அவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனவே பிரபா கணேசனின் அரசியலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பற்றிக் கதைப்பதையோ, அல்லது விமர்சிப்பது பற்றியோ அவர் சிற்று சிந்தித்துச் செயற்பட வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச் செல்வம் அரியநேத்திரன் மேலும் கூறினார்.

SHARE

Author: verified_user

0 Comments: