4 Feb 2014

மலசலகூடம் மற்றும் கிணறுகள் கையளிப்பு.

SHARE
  (தர்ஷன்)

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் அனுசரணையுடன் மட்.ஆரையம்பதி நண்பர்கள் குழாம் ஏற்பாட்டுடனும், லண்டனின் வசிக்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த றொனால்ட் தனலெட்சுமி என்பவரின் உதவியுடன் ஆரையம்பதி கிழக்கு பகுதியில் அமைத்த மலசலகூடம் மற்றும் கிணறுகள் நேற்று கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஆரையம்பதி கிழக்கு பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களுக்கு மலசலகூடமும், ஒருவருக்கு கிணறும் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கியதன் மூலம் கட்டப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு அப்பகுதியில் இருந்து சட்டக் கல்வி பயில்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு தெரிவான ஒரு மாணவிக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் வழங்கும் மூகமாக நான்கு இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளார்.

ஆரையம்பதி பிரதேசத்தில் நெசவுத் தொழில் புரிவதற்காக முன்பு எட்டு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆறு மலசலகூடம், ஒரு கிணறு அமைப்பதற்கும், பல்கலைக் கழக மாணவிக்கு வழங்குவதற்குமாக 733140 ரூபாய் நிதி அவரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக உரிய இடங்களுக்கு சென்று மலசலகூடங்கள் மற்றும் கிணறு போன்றவற்றை பார்வையிட்டு அதனை பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்நிகழ்வில் இதனை முன்னின்று தெரிவு செய்து கட்டுவித்த ஆரையம்பதி நண்பர்கள் குழாமின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதனடிப்படையில் ஆரையம்பதி கிழக்கில் வசிக்கும் சிவநேசன் ஜெயாளினி, கதிர்காமத்தம்பி பத்மினி, சசிகரன் வித்தியா, இராசதுரை சோதிலெட்சுமி, மேகனதாஸ் தயாளினி, பாக்கியராசா ரமேஸ் ஆகியோருக்கு மலசலகூடமும், தயாழினி மோனதாஸிக்கு கிணறும் வழங்கப்பட்டன.

இவர் கடந்த ஒரு சில வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையில் வாழும் மக்களுக்கும், கல்வியை தொடர கஷ்ரப்படும் மக்களுக்கும் இயன்ற உதவியை வழங்கி வருகின்றார். என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: