12 Apr 2022

மக்களின் தீர்மானத்தை உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம் – பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா)

SHARE

மக்களின் தீர்மானத்தை உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம்  – பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா)

உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள், சர்வாதிகார ஆட்சி மாற்றங்கள் அனைத்திற்குமான காரணிகள்  நம்நாட்டில் நிரம்பியுள்ளன. என்ன செய்வது என நீங்கள் தீர்மானியுங்கள். இல்லையெனில் மக்களின் தீர்மானத்தை உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பிரதம் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் செவ்வாய்க்கிழமை(12) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு திங்கட்கிழமை(11) பிரதமர் ஆற்றிய உரை தொடர்பாக என் மனதுக்குள் உடன் எழுந்த எண்ணங்களை என் தமிழ்த் தேசிய உணர்வுகளுடன் பகிர்கிறேன்.

அரசாங்கத் தலைமை மக்கள்முன் இன்னொரு தடவை உரையாற்ற முடியாத நிலையில் அரசாங்கப் பதவியணியில் தன் தம்பியைக் காப்பாற்ற பிரதமர் உரையாற்றியுள்ளார்.

இரண்டரை வருடங்களாக அரசுத் தலைவர், அரசாங்கத் தலைவர் எனும் வகையில் மேதகு அவர்கள் உரையாற்றுவார். இடையிடையே, பிரதமர் தன் தம்பிக்கு முட்டுக்கொடுப்பார். பேசும் போதெல்லாம் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சிறகடித்துப் பறக்கும். அவர்கள் உடல் மொழிகளோ வித்தியாசமாக இருக்கும்.

திங்கட்கிழமை ஆற்றிய பிரதமர் உரையில், சிங்களமும் இல்லை. பௌத்தமும் இல்லை. அவர்களது வழமையான கம்பீர உடல் மொழியும் இல்லை. வார்த்தைகளில் கூட சரத்து இல்லை. இன்னமும் கூட தமிழ் மக்கள் தம் உரிமைகளுக்காக போராடிய 70 வருட வரலாறுகள் தம்மை தக்க வைக்கத் தேவைப்படுகிறது.

யுத்தம் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. யுத்தத்தின் காரணங்கள் மாறிமாறி வந்த அரசாங்கங்களால் உணரப்படவில்லை. ராஜபக்ச குடும்பம் ஒட்டு மொத்த நாட்டின் சீரழிவுக்குக் காரணம் என்று நாம் கூறவில்லை. உங்கள் அரசின் 11 பங்காளிக் கட்சிகளே கூறுகின்றன. மொட்டுக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூறுகின்றனர். அமைச்சர்கள் பலர் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் நீங்கள் இன்னமும் புலியை ஒழித்த பூனையைப் புடுங்கிய சிங்கங்கள் நாம் என்று புலம்புகிறீர்கள்.

மக்கள் எரிபொருளுக்கு கியூவில் நிற்கிறோம். எரிவாயுவுக்கு கியூவில் நிற்கிறோம். அத்தியாவசியப்  பொருளுக்காக அலைகிறோம். உரமின்றி வாடுகிறோம். உயிர்வாழ வழியின்றி இருக்கிறோம் என்று நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம். அதை உணர்கிறோம். அது உண்மை என்கிறோம். என்று கூறும் நீங்கள். உங்கள் அரச பதவிகளைத் துறவுங்கள். நீங்கள் அடித்த கமிசன்களை நாட்டின் திறைசேரிக்குத் தாருங்கள் என்பதனை  மட்டும் ஏற்க ஏன் தயங்குகிறீர்கள்.

உலகத்தில் எந்த ஒரு அரசுத் தலைவரும் உங்களைப் போல் புகழப்பட்டவர்களுமில்லை. உங்களைப் போல் இகழப்பட்ட வருமில்லை. பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையால் வெற்றிக்களிப்பில் மமதை கொண்ட நீங்கள், அதே பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையினரால் இன்று இகழப்படுகிறீர்கள். இத்தனைக்கும் எம்தமிழ் இளைஞர்கள் இன்னும் ஓரமிருந்து ஓரக்கணாணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரச ஊழியர்கள், நாளாந்த கூலித் தொழிலாளர்கள் வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை யாவரும் உங்களுக்கு எதிராக கோசமிடுகிறார்கள். அதுவும் பெருமைமிகு உங்கள் குடும்பப் பெயரை சந்திக்கு இழுக்க வைக்க இன்னமும் விரும்புகிறார்கள்.

உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள், சர்வாதிகார ஆட்சி மாற்றங்கள் அனைத்திற்குமான காரணிகள்  நம்நாட்டில் நிரம்பியுள்ளன. என்ன செய்வது என நிங்கள் தீர்மானியுங்கள்.

இல்லையெனில் மக்கள் தீர்மானம் உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம். நேற்றைய உங்கள் உரை என் மனதில் தந்த உணர்வு இதுவே. அது தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது. இறுதி முயற்சி என்பதுவே  அவர் குறிப்பிட்டுள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: