13 Dec 2021

மட்டக்களப்பில் வீதிகளை ஊடறுத்துப் பாயும் மழைவெள்ளம் குளங்களின் நீர்ட்டமும் அதிகரிப்பு.

SHARE

மட்டக்களப்பில் வீதிகளை ஊடறுத்துப் பாயும் மழைவெள்ளம் குளங்களின் நீர்ட்டமும் அதிகரிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் உள்ளுர் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதுடன், சிறிய குளங்களும் நிரம்பி வழிவதுடன் பெரிய குளங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன.

மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குப்பட்ட மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி, றாணமடுமாலையர்கட்டு பிரதான வீதி, றாணமடு – 16 ஆம் கிராமம் பிரதான வீதி, ஆனைகட்டியவெளிசமிளையடி வீதி, உள்ளிட்ட பல வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதுடன், அப்பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களும், இதன்காரணமாக பயணம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமை(13) காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 78.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சு.ரமேஸ் தெரிவித்தார்.

எனினும், 32அடி கொள்ளளவுடைய நவகிரிக் குளத்தின் நீர் மட்டம் தற்போது 22அடி 5அங்குலமாகவும், 17கொள்ளளவுடைய தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 14அடி ஆகவும் உயர்ந்துள்ளது.

அதுபோன்று 33அடி 0அங்குலம் கொள்ளளவுடைய உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 27அடி 7அங்குலமாகவும், 15அடி 8அங்குலம் கொள்ளளவுடைய உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் தற்போது 13அடி 3அங்குலமாகவும், 19அடி 2அங்குலம் கொள்ளளவுடைய வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 16அடி 9அங்குலமாகவும், 11அடி 6அங்குலம் கொள்ளளவுடைய கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 10அடி 6அங்குலமாகவும், 12அடி 0அங்குலம் கொள்ளளவுடைய கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் தற்போது 6அடி 3அங்குலமாகவும், 15அடி 5அங்குலம் கொள்ளளவுடைய வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் தற்போது 14அடி 5 அங்குலமாகவும், புணாணை அணைக்கட்டின் நீர்மட்டம் தற்போது 7அடி 1அங்குலமாகவும்; உயர்ந்துள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள களுகல் ஓயாவின் 2 வான்கதவுகள் 4 அங்குலம் அளவில்  திறக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்து வெளியேறும் நீர் நவகரிக் குளத்திற்கு வந்து சேர்வதாகவும், பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.     














        

SHARE

Author: verified_user

0 Comments: