9 Oct 2021

சுருக்குவலை மீன்பிடியாளர்களால் ஏனைய மீனவர்கள் பாதிப்பு.

SHARE

சுருக்குவலை மீன்பிடியாளர்களால் ஏனைய மீனவர்கள் பாதிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவிகளிலும்,குளங்களிலும்,மற்றும் கடலிலும் சிலர் அதிக உழைப்புக்காகவும், வருமானத்திற்காகவும் சட்ட விரோதமான முறையில் மீன்பிடித்தொழிலை செய்து வருவதால் வசதி குறைந்த மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக களுதாவளை, மாங்காடு, செட்டிபாளையம், தேற்றாத்தீவு, கல்லடி,  நாவலடி, முகத்துவாரம், வாகரை பிரதேசத்தை அன்டிய பகுதிகளில் உள்ள கடற்தொழிலாளர்கள் சிலர் சட்ட விரோதமான முறையில் சுருக்கு வலையை பாவித்து, மின்னொளி பாய்ச்சியும், செயற்கை சுவாச உருளைகளை பாவித்து அதிகமான மீன்களை பிடிக்கின்றார்கள். இவ்வாறு சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் வசதிபடைத்தவர்களாக இருப்பதால் வசதிகுறைந்தவர்களாகிய நாம் கடற்கரையை நம்பி மீன்பிடிப்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மேற்பட்ட இயந்திரப்படகுகள் மூலம் சுருக்குவலை செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. சட்ட விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் மீனவர்கள் அனுமதியை பெற்று மீன்பிடி மேற்கொண்டாலும் அவை சட்ட விரோத செயற்பாடாகும். ஏனென்றால் கடற்கரை அண்மித்த கடற்கரை சூழலில் கரைவலையை பயன்படுத்தி  மீன்பிடிப்பதால் கடலில் இருந்து கரையை நாடிவரும் நெத்தலி, கீரி, சாலை, சூடை, சூரை, பாரக்குட்டி, போன்ற மீன்களின் வருகை, பிடிக்கப்படும் மீன்களின் அளவு குறைவாகத்தான் காணப்படுகின்றது. சுமார் 7 கிலோமீற்றருக்கு அண்மித்த கடற்கடை பிரதேசத்தில் இரண்டரை (2-1/2) இஞ்சியளவு வலையைப்படுத்திதான் மீன்பிடிக்க முடியும். ஆனால் சட்ட விரோத மீன்பிடிப்பாளர்கள் அரை இஞ்சியளவு (1/2) வலையைப்பயன்படுத்தி மீன்பிடிப்பதால் அதிகளவான மீனைப்பிடித்து வருமானத்திற்கு இரடிப்பாக வருமானம் ஈட்டி வருகின்றார்கள். இதனால் கடற்தொழிலில் ஈடுபட்டுவரும் கரைவலை மீன்பிடிப்பாளர்கள் தமது ஜீவனோபாயத்தை இழந்து குடும்பத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாமல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஒவ்வொரு கரைவலை மீன்பிடித்தோணியில் நாளாந்தம் ஈடுபடுகின்ற 50 தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். தங்களின் குடும்ப வருமானம் போதாததால் வேறு தொழிலை நாடவேண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றார்கள்.

இதேபோன்று மட்டக்களப்பில் உள்ள வாவிகளிலும், குளங்களிலும் இழுவ வலை, தங்கூஸ்வலை, டிஸ்கோவலை, முக்கூட்டுவலை போன்றவலைகளை பயன்படுத்தி சுமார் 20 வருட காலமாக தொடர்ச்சியாக மீன்பிடிப்பதால் நூற்றுக்கணக்கான பல அரியவகை மீனினங்கள் அழிந்து போயுள்ளதுடன் தற்போது வாவிகளிலும், குளங்களிலும் மீன்களின் வளர்ச்சி குறைந்துள்ளது. இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் மீன் முட்டையிடும் இடங்கள்,அதற்கு ஏதுவான சுற்றுச்சுழல் அழிவடைந்து போயுள்ளதுடன் மீன் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான வாவி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இ சட்ட விராத செயற்பாடானது துறைநீலாவணை, மகிழூர், மண்டூர், பாலமுனை, தம்பலவத்தை போன்ற இடங்களில் உள்ள வாவிகளில் இடம்பெறுகின்றது. குறிப்பாக சட்டவிரோத செயற்பாடுகளுக்கு சிறுவர்கள், பாடசாலையை விட்டு இடைவிலகியோர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இவ்விடயமாக கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானாந்தாவுக்கு மட்டக்களப்பு மீனவர்களது பிரச்சனை விடயமாக

தெளிவூட்டும் எழுத்து மூலமான ஆவணங்களை அமைச்சுக்கு சென்று நேரடியாக கையளித்து ஒருவருடத்தை கடந்துள்ள நிலையில் அமைச்சர் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். எனவே கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானாந்தா அவர்கள் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மீன்பிடி செயற்பாட்டுக்கு நேரடியாக வருகைதந்து இச்செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  மாவட்ட மீனவர்கள் முன்வைக்கின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: