26 Sept 2021

மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் கூறியிருப்பது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் கூறியிருப்பது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் கூறியிருப்பது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு  என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் மதி குமாரதுரை தெரிவித்துள்ளார். அவர் இவ்விடையம் தொடர்பில் சனிக்கிழமை(25)  மாலைவெளிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பானது மிக நீண்ட கால வரலாற்றினை கொண்டிருந்தபோதும் 2004ஆம் ஆண்டின் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயக ரீதியாக மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களின் அபிவிருத்தி மற்றும் உரிமை சார்ந்த பல விடயங்களை வென்றெடுத்து கிழக்கு மாகாணத்தில் ஒரு இன்றியமையாத தனிப்பெரும் தமிழ் கட்சியாக திகழ்கின்றது என்பது யாவரும் அறிந்த உண்மை.

அதனை பறைசாற்றும் முகமாக கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது எமது மட்டக்களப்பு வாழ் மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கென அறுபத்தேழாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளையும், கட்சியின் தலைவருக்கென 54,198 வாக்குகளையும் அளித்து வடகிழக்கில் எந்தவொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் பெற்றிராத அதிகூடிய விருப்பு வாக்கினை பெற்றவர் என்ற பெருமையினையும் ஈட்டிக் கொடுத்திருந்தனர்.

இவ்வாறு மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற இக்காலப்பகுதியில் மக்களின் மனதை வென்றெடுத்த ஒரு சிறப்பான கட்சி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி என்பதனை கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. அவ்வாறான ஒரு ஜனநாயகம் நிறைந்த மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியின் வளர்ச்சியினை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் கட்சியின் மீது பல அவதூறுகளையும், குற்றச்சாட்டுக்களையும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இவ்வாறான செயற்பாடுகளை ஒரு அநாகரிகமான செயற்பாடுகளாகவே நான் பார்க்கின்றேன்.

அதற்கிணங்க கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர்  பொன்னுத்துரை உதயரூபனவர்கள் தனது தொழிற்சங்க செயற்பாடுகள் காரணமாக முகநூல் வாயிலாக தனக்கு பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறித்த ஒரு நபரால் கொலை அச்சுறுத்தல் கூட முகநூல் பதிவுகள் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த சிலர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமாகிய  சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடன் புகைப்படம் எடுத்திருப்பதாகவும் பொதுவெளியில் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆகவே இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடக செயலாளர் என்ற அடிப்படையில் எனக்கிருக்கின்றது. அந்த வகையில் நான் ஏற்கனவே கூறியதைப் போன்று கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வடகிழக்கில் எந்த ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் பெற்றிராத அதிகூடிய விருப்பு வாக்கினைப் பெற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பல ஆதரவாளர்கள், தொண்டர்கள், நலன்விரும்பிகள் என பல்லாயிரக்கணக்கானோர் நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்கின்றார்கள். அவ்வாறான பலர் அவரைச் சந்தித்து புகைப்படங்கள் எடுப்பதும் அவற்றை முகநூல் பக்கங்களில் பதிவிடுவதும், கட்சியின் தலைவர் மீதும் அவரது ஆக்கபூர்வமான சிந்தனைகள் செயற்பாடுகள் மீதும் பற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவாக தமது பதிவுகளை முகநூல் பக்கங்களில் பதிவேற்றுவதும் ஒரு சாதாரண விடயம்.

ஆனால் அவ்வாறான ஒரு புகைப்படத்தினை ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது காட்டி என்னை அச்சுறுத்தியவர்கள் ''இந்த பிள்ளையானுடன் இருக்கின்றார்கள்'' என்று ஒரு பொறுப்புமிக்க மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் கூறியிருப்பது எமது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியினை வெளிப்படுத்துகின்ற செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன். ஆகவே ஒரு பொறுப்புமிக்க கட்சியினுடைய ஊடகச் செயலாளர் என்ற வகையில் இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

எது எவ்வாறு இருப்பினும் ஒரு தொழிற்சங்கம் தனது செயற்பாடுகளை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அவ்வாறான தொழிற்சங்க செயற்பாடுகளானது அரசியல் சாயம் கலக்கப்படாது நேர்மையாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அவா. அத்துடன் உங்களது தனிப்பட்ட மற்றும் சமூகம் சார்ந்த முகநூல் பதிவுகள் மற்றும் வாதங்களை அரசியலாக சித்தரித்து அரசியல் கட்சிகளுக்கிடையேயும், மக்களுக்கிடையேயும் பிளவினையும் அரசியல் ரீதியான காழ்புணர்ச்சியினையையும் உண்டுபண்ணாது நீங்கள் கூறுவதைப் போன்று இலங்கைச் சட்ட நியமங்களுக்கமைய குறித்த நபர்கள் உண்மையில் உங்கள் தொழிற்சங்க செயற்பாடுகள் மீது அச்சுறுத்தல் விடுத்திருந்தால் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முழுச் சுதந்திரமும் உங்களுக்குள்ளது.

ஆகவே இனிவரும் காலங்களில் இவ்வாறான அரசியல் சாயம் கலக்காதவண்ணம் நாகரிகமான முறையில் உங்களது தொழிற்சங்க செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்,





SHARE

Author: verified_user

0 Comments: