23 Mar 2021

அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு

SHARE

அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பொது நிர்வாக சுற்றுநிருபம் 18/2020 இற்கு அமைய அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 3 மாத கால இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பின் இறுதி நாள் நிகழ்வானது இன்று (23) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டோபா மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் பொறியியலாளர் அருணன், மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் வீ.சந்திரகுமார் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்களென பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் அதிதிகளின் சிறப்புரைகள் இடம் பெற்றதுடன், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை நிகழ்வுகள் சிங்கள மொழியில் நிகழ்த்தப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த 02.02.2021 ஆந் திகதி அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றிவருகின்ற மத்திய தர ( மட்டம் - 2 )  உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பினை மிகவும் திறம்பட நிறைவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இப் பயிற்சி வகுப்பின் மூலம் உத்தியோகத்தர்கள் சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது வேலைகளையும் இலகுபடுத்தி கொள்ள வழிவகுக்கின்றது.

தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் சிங்கள மொழி முலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.













SHARE

Author: verified_user

0 Comments: