19 வருடங்களாக எல்லை நிர்ணயம் செய்யப்படாமல் இருக்கும் கோறளைப்பற்றில் இரு பிரதேச செயலகப் பிரிவுகளையும் உடனடியாக எல்லை நிர்ணயம் செய்ய பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம்.
இவ்வாண்டிற்கானதும் புதிய அரசாங்கத்தின் முதலாவதுமான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் தலைமையில் திங்கட்கிழமை 15.03.2021 மேற்படி இரு பிரதேச செயலகங்களிலும் புறம்பாக இடம்பெற்றன.
பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைத் தலைவர்கள் அதன் செயலாளர்கள் அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களின் அதிகாரிகள் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தளர்.
நிகழ்வில் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முன்னுரிமையின் அடிப்படையில் இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளையும் வர்த்தானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் எட்டப்பட்டது.
இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளையும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துவதன் ஊடாக நிருவாக முரண்பாடுகளை நீக்கி அரச நிருவாக நடவடிக்கைகளை இலகுவாக மக்களின் காலடிக்குக் கொண்டு சேர்ப்பிக்க வழியேற்படும் என்றும் அங்கு அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இப்பிரதேச செயலகங்கள் 1999ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பன்னம்பலன ஆணைக்குழவின் சிபார்சுக்கமைவாகவும் 13.07.2000 ஆம் ஆண்டின் அமைச்சரவைப் பத்திர 00/1355/05/65 இலக்க தீர்மானத்திற்கு அமைவாகவும் 2002.05.25ஆம் திகதி உருவாக்கப்பட்டதாகும்.
எனினும் இவை ஸ்தாபிக்கப்பட்டு சுமார் 19 வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் இப்பிரதேச செயலகப் பிரிவகளுக்குரிய எல்லைகளும் நிருவாகப் பிரிவுகளும் உரிய முறைப்படி பகிர்ந்தளிக்கப்படவில்லை.
அதேவேளை இதே காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்டு முழுமையான நிருவாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.
ஆனால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயகத்திற்கென பல ஆணைக்குழுவினாலும் அமைச்சரவையினாலும் சிபார்சு செய்யப்பட்ட 240 சதுர கிலோமீற்றர் நிருவாக அலகு வழங்கப்படாமல் வெறும் 7.8 கிலோ மீற்றர் நிருவாகப் பகுதி மாத்திரமே வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு உரித்தான 176 சதுர கிலோமீற்றர் வழங்கப்படாது வெறும் 22 சதுர கிலோமிற்றர் பரப்பளவைக் கொண்டே அப்பிரதேச செயலகப் பிரிவு இயங்கி வருகின்றது.
எனவே இது வெளிப்படையான சமூக ஓரங்கட்டலும் பாரபட்சமுமாகும்.
எனவே இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக வலியுறுத்தப்பட்டது.
இந்த விடயம் உடனடியாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உறுதியளித்தார்.
0 Comments:
Post a Comment