24 Jan 2021

கட்டுரை : மறைந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 வது ஆண்டு நினைவு நாள் இன்று.(24.01.2021)

SHARE

கட்டுரை : மறைந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 வது ஆண்டு  நினைவு நாள் இன்று.(24.01.2021) 

(வ.சக்திவேல்)

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜன் அவர்களின் சேவையும், செயற்பாடுளுக்கும் நிகர் அவரேதான். இலங்கையிலிருந்து வெளிவந்த தேசிய பத்திரிகைகளில் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டு பல்வேறு விடையங்கள் தொடர்பில் அவர் ஆதார பூர்வமாக வெளிக்கொணர்ந்திருந்தார். அப்போது அவர் திருகோணமலையில் இடம்பெற்ற 5 மாணவர்களின் படுகொலைகள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்திருந்தார். இந்நிலையில்தான் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். 

ஓர் நாட்டின் அபிவிருத்தியின் நான்கு தூண்களில் ஒரு தூணாக விளங்குவது ஊடகத்துறையாகும். இவ்வாறான துறைசார்ந்தவர்களை நசிக்குவதும், படுகொலை செய்வதும், அச்சுறுத்துவதும், ஜனநாயக மீறல் என்பதோ, அது மனித உரிமை மீறலுமாகும். சுகிர்தராஜனின் படுகொலைக்கு எதிராக பல்வேறுபட்ட கோசங்கள் எழுப்பட்ட போதிலும் இன்றுவரை அதற்குரிய தீர்வு இல்லாமலேயே இருந்து வருகின்றது.  

1969 டிசம்பர் 12 ஆம் திகதி மட்டக்களப்பு - குறுமன்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி திருகோணமலை உவர்மலையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுகிர்தராஜனின் தந்தையார் சுப்பிரமணியம், தாயார் அருள் ஞானம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்திலும், உயர்கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்லூரி, என்பவற்றிலும் பயின்றார்.

பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரான இவர் 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் பணியில் சேர்ந்தார்.

திருகோணமலையில் இருந்து சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்ரோ நியூஸ், ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர்.மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்ரோ நியூஸ் பத்திரிகையில் ஈழவன் என்ற பெயரிலும் அரசியல் விடயங்களை எழுதி வந்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - இம்முறை திருகோணமலையில்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றயதினம் (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து  கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில்  குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.

சுகாதார விதி முறைகளிற்கு ஏற்றாற்போல் இடம்பெறுகின்ற குறித்த இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளென பலரும் கலந்து கொள்கின்றனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றி மௌன அஞ்சலியும் இடம்பெறுகின்றது. 

2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை சுகிர்தராஜன் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.

மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக்காட்டின. இதனால் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அழுத்தங்கள் ஏற்பட்டன.

சுகிர்தராஜன் யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போதே 2006 ஜனவரி 24 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு குருமண்வெளியை பிறப்பிடமாகக் கொண்ட சுகிர்தராஜன் அம்பாறை வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டாண்டு காலம் மறைந்த ஊடகவியாலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை சக ஊடகவியாலார்கள் ஒழுங்கு செய்து, அதில் கலந்து கொள்பவர்களும், இவ்வாறு படுகொலை செய்யபடப்பட்ட, அல்லது காணாமலாக்கப்பட்ட, ஊடகவியாராளர்களுக்கு நிதி வேண்டும், நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என வருடாந்தம் காலத்திற்குக் காலம் கோசங்களோடு, கோரிக்கைகளை முன்வைக்கின்றபோதும் அதில் எதுவித முன்னேற்றங்களும் இல்லை என்றே கூறலாம்.

உள்ளதை உள்ளபடி தான்சார்ந்த ஊடகங்களின் வாயிலாக வெளி உலகிற்கு காண்பிப்பதற்காகத்தான் களத்தில் நன்கு பயிற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் களத்தில் நிற்கு செயற்படுகின்றார்கள். அது அவர்களுக்குக் கிடைக்கின்ற வேதனத்திலும் பார்க்க மக்கள் மீது கொண்டுள்ள அதீத கரிசனையும், பற்றுறுதியுமாகும் எனலாம். ஆனாலும் இவ்வாறு மழை, வெயில், புயல், வெள்ளம், என பாராது தன்னலம் காருதாது பிறர் நலனுக்காக தினம் தினம் உழைத்துக் கொண்டிருக்கம் ஊடகவியலாளர்களின் பேனாக்களை நசிக்க முனைவதென்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு நசுக்கப்பட்ட ஓர் ஊடக உறவுதான் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்கள். 

எனவே இனிமேலாவது நாட்டின் நாலாபாகமும் களத்தில் நின்று செயற்படுகின்ற ஊடகவியலார்களின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படாதவாது அவர்களின் நலநோம்பு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி படுகொலை செய்யப்பட்ட சுகிர்தராஜனின் குடும்பதினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க துறைசார்ந்தவர்கள் முன்னிற்க வேண்டும் என்பதையே அவைரும் எதிர்பார்கின்றனர்.SHARE

Author: verified_user

0 Comments: