8 Dec 2020

அர்ப்பணிப்புடனான அரச சேவையை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி செய்ய முன்வரல் இன்றியமையாயதது - திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்

SHARE

அர்ப்பணிப்புடனான அரச சேவையை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி செய்ய முன்வரல் இன்றியமையாயதது என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்ற வேலைத்திட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்பயிற்சியுடன் கூடிய அரச வேலைவாய்ப்புக்களை வழங்கல் வேலைத்திட்டத்தின்  திருகோணமலைமாவட்ட  தலைமைத்துவ பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முன்னர் வெளிப்படுத்திய 10 அம்ச கொள்கைப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வேலைத்திட்டத்தின் ஒரு விடயமாக இது அமைந்துள்ளது.வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குறைந்த கல்வித்தகைமையுடைய இளைஞர் யுவதிகளுக்கு உரிய தொழிற்பயிற்சியை வழங்கி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்ப செய்பவர்களாக மாற்றுவதே இதன் மூல நோக்கமாகும்.அரச சேவைக்கு எல்லோரும் வரும் பாக்கியம் கிடையாது. தெரிவுசெய்யப்பட்ட நீங்கள் பாக்கியசாலிகள்.ஆறு மாத கால பயிற்சி இன்றுடன் ஆரம்பமாகிறது. அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். பயிற்சியின் பின்னர் NVQ சான்றிதழுடன் கூடிய அரசதுறை நிரந்தர நியமனத்திற்கு உள்ளீர்க்கப்படுவீர்கள்.

வழங்கப்பட்ட கடமைகளை சரியாகவும் அர்ப்பணிப்புடனும் விசுவாசத்துடனும் மேற்கொள்ளல் வேண்டும். அதன் மூலம் மக்களின் உள்ளங்களை வெல்லுவதுடன் உயர் அடைவுமட்டங்களையும் காணமுடியும். அத்துடன் பல வளங்கள் நிறைந்து காணப்படும் எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஏதேனும் வகையில் உதவக்கூடிய பகுதியினராக தாங்கள் இருப்பது வேண்டப்படுவதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இவ்வேலைத்திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக முதலாம் கட்டத்தில் 346 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளீதரன், மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அனஸ்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன் , உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: