8 Dec 2020

இறுதி மூச்சு வரை இக்கட்சியில் இருப்பேன் என்ற அலிஸாஹிர் மௌலானா கதி கலங்கி இடையில் விலகுவதாக அறிவிப்பு

SHARE
இறுதி மூச்சு வரை இக்கட்சியில் இருப்பேன் என்ற அலிஸாஹிர் மௌலானா கதி கலங்கி இடையில் விலகுவதாக அறிவிப்பு.
எமது தூய நம்பிக்கையின் அடிப்படை உரிமைக்கே உலைவைத்து எமது மத அனுஷ்டானத்தையே  சவாலுக்கு உள்ளாக்கிய காரண கர்த்தாக்கள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள்தான் என்றிருக்க எவ்வாறு எனது கடைசி மூச்சை நான் முஸ்லிம் காங்கிரசில் இருந்து கொண்டு சுவாசிக்க முடியும் என கேள்வி எழுப்பி நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார் அலிஸாஹிர் மௌலானா.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்பியும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா தனது இராஜினாமாக் கடிதத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  றவுப் ஹக்கீமுக்கும், அதன் பிரதியை கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

நீண்ட அந்தக் கடிதத்தில் அலிஸாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளதாவது

நான் கடந்த 05 வருடங்களாக இந்தக் கட்சியில் இணைந்த நாள் முதல் பகிரங்கமாகக் கூறி வந்த விடயம் இறுதி மூச்சு இருக்கும் வரை இக்கட்சியில் இருப்பேன் என்பதாகும், இப்போதைய நிலையில் எமது விசுவாசமே, சுவாசமாக இருக்கத்தக்க, எமது நம்பிக்கைகளை எல்லாம் சிதறடித்து குந்தகம் விளைவிப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எமது கட்சியை சார்ந்தவர்களே ஆதரவுக் கரம் நீட்டி இருக்கின்றனர்.

இதனை எந்த வகையிலும் எனது மனச்சாட்சிப்படி ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது,

ஒரு முஸ்லிமினது ஜனாஸாவைக் காப்பாற்றி இறுதிக் கடமைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளதன் மூலமாக  உணர்வுபூர்வமாக எம் எதிர்காலத்தை வழிநடாத்த  கூடிய இளைஞர்கள் உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கு ஆளாகி உள்ளார்கள்,

இவர்களை வழிநடாத்தி தேவையான உள ஆற்றுப்படுத்தல்களை வழங்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆகையால் தொடர்ந்தும் இவ்வாறான நிலையில் எமது கட்சிசார் பிரதிநிதிகளது கவன ஈனமான செயற்பாடுகள் காரணமாக நாங்களும் குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டுள்ளோம்.

எமது கட்சி உறுப்பினர்களது நாடாளுமன்ற செயற்பாடுகள் மக்கள் மீதும், சமூகம் மீதும் கரிசனை இல்லாத சூழலில் இக்கட்சியோடு தொடர்ந்தும் பயணிக்க முடியாமைக்கு என்னை மன்னியுங்கள்..

இந்த மனோநிலையுடன் என்னால் தொடர்ந்தும் இக்கட்சியோடு பயணிக்க முடியாது என்ற மனோநிலையினை இங்கு வெளிப்படுத்துகிறேன்.

எந்தவித சலுகைகளையோ, சிறப்புரிமைகளையோ, பதவிகளையோ நான் எதிர்பார்க்கவும் இல்லை. அவற்றை தேடி  அலைபவனுமில்லை. உண்மையிலேயே, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி ஸ்திரத்தன்மையை நிலைபெற வைப்பதற்க்காக எனது நாடாளுமன்ற பதவியையே நானே முன்வந்து இராஜினாமாச் செய்த ஒரு சிலரில் நானும் ஒருவன் என்று சொல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

முஸ்லிம் சமூகத்திற்காகவும், எமது நாட்டின் அத்தனை பிரஜைகளின் சுபீட்சத்துக்கும் நான் ஆரம்பம் முதல் தொழிற்பட்டு வந்தேனோ, அதே அடிப்படையில்தான் என்னால் தொடர்ந்தும் செயற்பட முடியும்,

சமூகத்தின் நன்மை கருதி உங்களது கட்சி செயற்பாடுகள் அமைய வேண்டும் என பிரார்த்தித்து வாழ்த்தியவனாக, 05 வருட காலத்தில் எனது பயணத்திற்கு உறுதுணையாக இருந்தமைக்காக எனது மனப்பூர்வமான நன்றிகளை தலைவராகிய உங்களுக்கும், கட்சி செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் என அனைவருக்கும் சமர்ப்பித்தவனாக மன வேதனையுடனும், ஏமாற்றத்துடனும் கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.SHARE

Author: verified_user

0 Comments: