25 Nov 2020

கொரோனா வைரஸ் நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நலிவடைந்தோருக்கு உதவிகள் வழங்கி வைப்பு.

SHARE

கொரோனா வைரஸ் நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நலிவடைந்தோருக்கு உதவிகள் வழங்கி வைப்பு.
கொரோனா வைரஸ் நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நலிவடைந்தோருக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருவதாக அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உதவி பணிப்பாளர் அழகுராசன் மதன் தெரிவித்தார்.

அகம் மனிதாபிமான வள நிலையத்தின்  மூன்றாம்  கட்ட உதவி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 24.11.2020 செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உதவி இணைப்பாளர் மதன் “கொவிட்  - 19  கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமைகளின்போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் சுகாதாரமான நடைமுறைகளுக்கு ஆதரவளித்தல் பாடசாலை கல்வியின் சிறந்த சூழலுக்காக மாணவர்கள் ஆசிரியர்களின் உடல் உள ஆரோக்கியத்தை புனரமைத்தல்" எனும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலுள்ள

வாகரை, கிரான், செங்கலடி, திருக்கோவில், ஆலயடிவேம்பு, அக்கரைப்பற்று, மூதூர், சேருவில வெருகல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்த பயனாளிகளுக்கு வாழ்வாதார செயற்பாடுகள், சத்துணவு மேம்பாடு பாடசாலைகளில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது” என்றார்.

இந்நிகழ்வில் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி ஸ்ரீநாத் அவர்களின் கண்காணிப்புடன் 40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சத்துணவுப் பொதிகளும் பெண்கள் பெண் பிள்ளைகளுக்கான 60  சுகாதாரப் பொதிகளும் நலிவுற்ற 5 பயனாளிக் குடும்பங்களுக்கு  சுமார் 125000 ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் சட்ட ஆலோசகரும், மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பளருமாகிய சட்டத்தரணி மயூரி ஜனன் மேலதிக சுகாதார வைத்தியர் கே.கஸ்தூரி சிரேஸ்ட சுகாதார பரிசோதகர் ஆர். வினோதினி அகம் மனிதாபிமான வள நிலையத்தின் மாவட்ட அலுவலர்களான ஏ.மகாதேவன், ரீ.அரவிந்தன், அருவி பெண்கள் வலையமைப்பின் திட்ட இணைப்பாளர் எஸ். தர்ஷினி வெளிக்கள உத்தியோகத்தர் என்.லுனிற்றா ஆகியோரும் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: