23 Nov 2020

ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்

SHARE

(செங்கலடி நிருபர்)

ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்.

நாட்டின் ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசசெயலாக பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை புனித வளனார் பிரதான  வீதியானது ஒரு கி.மீ  கிராமிய கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் ஆரம்ப நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (22) இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக பங்கேற்றார். மதகுருமார், மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் குறித்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 

மதகுருமார், மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த  இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்….

எதிர்வரும் ஜனவாரிமாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் ஆயிரக்கணக்கான வீட்டுத்திட்டங்களை, மலசலகூடங்களையும் கொண்டு வருவோம், வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்போம். இது பலருக்குவயிறெறிச்சல். இப்போது புதிய வடிவம் வந்துள்ளது பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வியாழேந்திரனைப் பாருங்கள் என்றும் வடக்கிலே அங்கஜனைப் பாருங்கள் என்றும் எங்களைப்பற்றிதான் குறைகூறிக்கொண்டிருக்கின்றனர்.

எனக்கொரு சந்தேகம் எதிர்க் கட்சியினருக்கு, அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்க முடியாது நீங்கள் என்ன சொல்லி தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவோம் உரிமையைப் பெற்றுத்தருவோம் என்கிறீர்கள் எனவே அதைப்பெற்றுக் கொடுங்கள். நாம் அபிவிருத்தியை செய்கிறோம் நீங்கள் தமிழ் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள். நீங்கள் உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்கட்சியில் இருந்து கொண்டு ஒரே கதையை தமிழிலும் , ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடித்து அரசாங்கம் தரும் வாகன அனுமதிப்பதிரததை, மாத சம்பளத்தை, பொலிஸ் பாதுகாப்பையும், அரசாங்கம் தரும் சிற்றூண்டிச் உணவையும் நன்றாகச் சாப்பிட்டு, அரசாங்க விடுதியில் நன்றாக நித்திரை செய்து கொண்டு பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை.

மக்களின் பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கின்ற அரசியல் தலைவர்கள் எம் மக்களுக்குத் தேவை. உங்களால் தமிழ் மக்களுக்குரிய அடிப்படைப் பிரச்சினையைகூட பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் எதற்கு அரசியலில் இருக்கின்றீர்கள்.

நீங்கள் ஏன் வியாழேந்திரன், அங்கஜனைப்பற்றிப் பேச வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் பாராளுமன்றில் ஆளும் கட்சியில் உள்ள தமிழ் எம்.பி மாருக்கு ஏசுவோம் ஆகவே எங்களுக்கு வாக்களியுங்கள் என்றா? நீங்கள் வாக்குக் கேட்டீர்கள் இல்லையே.

வியாழேந்திரன் வீதி போடுகிறார் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கிறார் இப்படியே சென்;றால் எங்களுடைய பிளைப்புவாத அரசியலை நடாத்த முடியாது மக்கள் அவர் பக்கம் சென்றுவிடுவார்கள் என்ற பயம். அதனால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகின்றனர். இவை கீழ்த்தரமானவை.

நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தாலும் எமது இனத்திற்கு எதிரான வேலைகளை ஒரு போதும் செய்ய மாட்டோம். தற்போது வியாழேந்திரன் ஆளும் கட்சியில் இருந்து வெளியே வந்தால் எல்லாம் சரியாகி விடுமா? ஆளுங்கட்சியில் இருந்ததால்தான் இவ்வாறான வேலைகளை செய்யக்கூடியதாகவுள்ளது. இல்லாவிட்டால் இந்த வேலைத்திட்டமும் எமது மக்களுக்கு இல்லாமல் போகும்.

தமிழரசுக்கட்சியில் தலைவர் மாவே சேனாதிராஜாவே தோல்வி அடைந்தார் ஏன்? இந்த மாவட்டத்தில் இருந்த சிறிநேசன் உட்பட 2 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்தார்கள் ஏன்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22ஆக இருந்து 16ஆக இருந்து ஏன் தற்போது 10ஆக வந்திருக்கின்றனர்? மக்கள் நிராகரித்துள்ளார்கள். நானாக இருந்தாலும் சரி. மக்களுக்கான சேவையை மக்களுடைய எதிர்பார்ப்பை நாடி பிடித்து பிரச்சினையைத் தீர்த்துக் கொடுக்காவிட்டால் மக்கள் என்னையும் நிராகரிப்பார்கள். மக்களின் எதிர்பார்ப்பை நாடி பிடித்து   நிறைவேற்றுபவன்தான் உண்மையான மக்கள் தலைவனாக இருக்க வேண்டும்.  

பாராளுமன்றில் சத்தமிடுவதாலோ பத்திரிகைகளில் அறிக்கை விடுவதாலோ தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுவதில்லை.

எதிர்க்கட்சியில் இருக்கின்ற சம்மந்தன் ஐயா உட்பட அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களையும் நான் இரு கரம் கூப்பி அழைக்கிறேன். வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை சார்பாக எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்றில்லாமல் சிறுபான்மைப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றாகப் பேசுவோம். நாங்கள் உங்களோடு வருகிறோம். உங்களுக்கு அது முக்கியமில்லை பிரச்சினையிருந்தால்தான் உங்களுக்கு அரசியல். எங்களுக்கு அதல்ல பிரச்சினையைத் தீர்த்துக்கொடுக்க வேண்டும் என்பது

பாராளுமன்றில் அங்கஜனுக்கும் வியாழேந்திரனுக்கும் ஏசுவதில் பிரயோசனமில்லை. உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் என்ன செயதீர்கள் என்று சொல்லுங்கள். 5வருடம் முடிவில் பாராளுமன்றில் வியாழேந்திரனுக்கு 10தரம் ஏசினோம் என்றா சொல்லப் போகின்றீர்கள். வியாழேந்திரன் என்ன செய்கிறார் என்று பார்ப்பதா உங்களுக்கு வேலை இதற்குத்தானா மக்கள் வாக்களித்தனர்.

இப்படியான கதைகளைத் தொடர்ச்சியாக கதைத்துக் கொண்டிருந்தால் தற்போதுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 ஆக மாறும் நிலமை உருவாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

   















SHARE

Author: verified_user

0 Comments: