1 Nov 2020

மக்களின் அசண்டையீனம் இறப்புக்களை அதிகரிக்ககூடும்.

SHARE

(படுவான் பாலகன்) 

மக்களின் அசண்டையீனம் இறப்புக்களை அதிகரிக்ககூடும். 

சீனாவில் தொடங்கிய கொரோனா கடல்கடந்து இலங்கை தீவிலும் உட்நுழைந்து, தீவிலும் பரந்திருக்கின்றது. ஆரம்பத்தில் தீவில் பல்வேறு கட்டுப்பாடுகளும், மட்டுப்பாடுகளும் இடப்பட்டமையினால்  கட்டுப்பாட்டுக்குள் கொரோனா தொற்று வைக்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கை தீவிற்கும், இலங்கை அதிபருக்கும் நற்பெயரும் பாராட்டுக்களும் கிடைத்தன. ஆனால் தற்போது இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதேவேளை இறப்பும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதேபோக்கில்  தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாகவிருந்தால் இலங்கை தீவு பல்வேறு நெருக்கடியையும், சிக்கல்களையும் எதிர்கொள்ளும் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை.


இன்னமும் சமுக பரவலாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என இலங்கை அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தாலும், ஏதோ ஒருவகையில் தீவில் உள்ள சிறிய கிராமங்களைச் சேர்ந்தவர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. இதனால் மக்கள் தங்களை தாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். நாட்டினை முடக்குகின்ற போது பாரிய பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் என்பதும் உண்மைதான். இதனால் நாட்டினை முற்றாக முடக்கும் நிலைக்கு இலங்கை அரசாங்கம் இன்னமும் வரவில்லையென கூறுக்கொண்டிருக்கின்ற அதேவேளை தேவையான இடங்களில் மாத்திரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை அமுல்படுத்தி வருகின்றனர். இச்சூழலில் ஒவ்வொரு  தனிநபர்களும் தங்களது பாதுகாப்பு குறித்து அதிக கவனமெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.


கண்ணுக்கு தெரிகின்றவற்றுடன் போராடுகின்ற போது அவற்றில் இருந்து விலகிக்கொள்ள முடியும். ஆனாலும் தற்போது இடம்பெறுகின்ற போராட்டம் கண்ணுக்கு தெரியாத நுண்ணியிருடனானது இதனால், இது எங்கு இருக்கும், யாரிடம் இருக்கும் என்பதனை வெற்றுக்கண்ணால் கண்டுவிட முடியாது. இத்தொற்று இனம், மதம், பதவி, பட்டம் பார்த்து தொற்றுவதில்லை. நாட்டின் தலைவர்களுக்கும் தொற்றி இருக்கின்ற அதேவேளை சாதாரணமாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் இத்தொற்று ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையிலும் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள், சுகாதார அமைச்சு, ஊடக அமைச்சு, கிராமங்கள், கைத்தொழில்சாலை வேலைசெய்பவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர், மாணவர்கள் என அனைத்து துறையினருக்கும் இத்தொற்று ஏற்பட்டிருக்கின்றது. மிகவேகமாகவும் பரவிக்கொண்டிருக்கின்றது. இப்பரவலில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள அரசாங்கத்தினால் விடுக்கப்படுகின்ற சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு பின்பற்றாமல் நடப்போமாகவிருந்தால் எதிர்கொள்ளவேண்டிய இழப்புக்கள் பாரிய அளவாகக்கூட இருக்கலாம்.


தொற்றாளர்கள் அதிகரிக்க, அதிகரிக்க அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இடம், மருத்துவம், ஆளணி போன்றவற்றிற்கான தேவை அதிகப்படும். இத்தேவைகளை உடனடியாக சரிசெய்வதென்பதும் மிகக்கடினமாகவே இருக்கக்கூடும். இதனால் நோயாளர்களின் பராமரிப்பு, கண்காணிப்பு போன்றன குறைவடையும். இதன்மூமாக இறப்புக்கள் அதிகரிக்க வாய்ப்பாகும். இதேவேளை தொற்றாளர்களும் தங்களுக்குள்ள நோய்; அறிகுறிகளை குறிப்பிடாமல், மறைத்து சிகிச்சை பெற செல்கின்ற போது அங்குள்ள வைத்தியர்களுக்கும், தாதியர்களுக்கும், ஏனைய ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பாகும். அவ்வாறு வைத்தியசாலைகளில் உள்ள ஊழியர்களுக்கும் பெருமளவில் தொற்று பரவுமாகவிருந்தால் வைத்தியசாலைகளை பலவற்றை இழுத்துமூட வேண்டிய நிலைக்கும், ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய துர்ப்பார்க்கியமும் ஏற்படலாம். இதனால் சுகாதார துறை வீழ்ச்சியடைந்து இன்னமும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.


இதேவேளை வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்தவர்களை குறிப்பாக, கொழும்பு, கம்பகா மாவட்டங்களில் இருந்து வருகைதந்தவர்களை வீடுகளிலே தனிமைப்படுத்தி இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கிணங்க வீட்டிலே தனிமையில் இருக்காது, வெளியில் செல்ல நேரிட்டாலும் இன்னமும் சமுகத்தில் தொற்று ஏற்படவாய்ப்பாகலாம். இவ்வாறான நிலையில், ஒவ்வொரு தனிமனிதனும் ஒட்டுமொத்த சமுகத்தினை தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்வதற்கு சுகாதார நடைமுறைகளை ஒழுங்குமுறையாக பின்பற்றுவதும், அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியில் செல்வதை தவிர்ப்பதுமே மிகச்சிறந்த வழியாகும்.


நாளொன்றிற்கு 10ஆயிரத்திற்கு மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் பரிசோதிக்கப்படமாலே உள்ளதாக கூறப்படுகின்றது. இன்னமும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனைக்காக காத்திருக்கும் அளவும் கூடிக்கொண்டே போகலாம். சட்டத்திற்கு அஞ்சி முகக்கவசங்களையும், ஏனைய சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாமல், நம்மையும், நம்குடும்பத்தினையும் காப்பாற்றிக்கொள்ள அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்கின்றபோது, தொற்றிலிருந்து விடுபட முடியும்.

SHARE

Author: verified_user

0 Comments: