13 Oct 2020

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அச்சுறுத்தல்களை தடுத்துநிறுத்த இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மட்டு ஊடக அமையம் வேண்டுகோள்!

SHARE

Add caption
இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் மட்டு ஊடக அமையமும் இணைந்து வேண்டுகோள்விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட முழு நேர ஊடகவியலாளர்களான  சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன்  உள்ளிட்ட இருவர் மீதான தாக்குதலுக்கு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் என்பன இணைந்து எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கையில் மீண்டும் மெல்ல மெல்ல  ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்தும் கலாசாரம் கடந்த காலங்களில் மிக சாதாரணமாக இடம்பெற்றதுடன் இந்த நாட்டில் சுமார் 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீண்டும் இலக்கு வைக்கப்படுகின்றார்களா என்ற அச்சம் இந்த சம்பவத்தின் மூலம் உருவாகியுள்ளது.

இலங்கை வரலாற்றில் நீதி கிடைக்காத சமூகமாக ஊடகவியலாளர்களும் உள்ளனர். இதுவரை படுகொலை செய்யப்பட்ட எந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு மாறி மாறி வந்த  எந்த அரசும் நீதியை பெற்றுக்கொடுக்க வில்லை. இலங்கையில் ஊடகவியலாளர்களை படுகொலை செய்த ஒரு நபருக்கும் இதுவரையில் தண்டணை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கும் நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே தற்போதைய அரசு இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.அத்துடன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு ஊடகவியலாளர்களின் உடல் நிலை குறித்தும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் குறித்து சர்வதேச உள்ளூர் ஊடக அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் இது போன்ற ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் மட்டு ஊடக அமையமும் இணைந்து வேண்டுகோள் விடுக்கின்றோம்.

வா.கிருஸ்ணகுமார், செ.நிலாந்தன்,

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு ஊடக அமையம்.



SHARE

Author: verified_user

0 Comments: