30 Sept 2020

சிறுபான்மையினர் தவறிழைத்து விட்டோம் கவனமாகக் காய் நகர்த்த வேண்டிய இக்கட்டான காலகட்டம் இது - நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்.

SHARE

சிறுபான்மையினர் தவறிழைத்து விட்டோம் கவனமாகக் காய் நகர்த்த வேண்டிய இக்கட்டான காலகட்டம் இது - நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்.திரும்பும் திசையெல்லாம் நெருக்கடிகள் நிறைந்திருப்பதால் மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் சிறுபான்மையினர் காய்நகர்த்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலகத்தில் திங்கள் இரவு 28.09.2020 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

கிழக்கின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதில் கடந்த காலங்களில் சிறுபான்மையினர் தவறிழைத்து விட்டோம் என்பதை தற்போது காலம் உணர்த்தி நிற்கின்றது.

உரிமைகளையும் நலனோம்பு விடயங்களையும் அபிவிருத்திகளையும் அடைந்து கொள்வதில் சிறுபான்மை மக்களின் போராட்டக் குரலாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் உறுதியாக இருந்து வந்திருக்கின்றது.

அந்த வகையிலே சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து கொண்டு ஒரு பேச்சுவார்த்தை மூலமாக நாங்கள் நாங்கள் எங்களது அபிலாஷைகளை அடைந்து கொள்வதில் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.

‪சிறுபான்மையினருக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை முதலில் தீர்க்க வேண்டும்.

இந்த விடயத்திலே சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு முதலில் குறைந்தபட்சம் கலந்துரையாடலையாவது செய்ய வேண்டும்.

அதன்மூலம் பல விடயங்களை சிறுபான்மையினர் சாதித்துக் கொள்ள முடியும்.

ஆக்கபூர்வமாகவும் தாக்கம் செலுத்துகின்ற வகையிலும் சிறுபான்மைச் சமூகங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

எந்தவொரு அரசாங்கமும் சிறுபான்மைச் சமூகங்களுக்கான எந்தவொரு வரப்பிரசாதங்களையும் தானாக முன்வந்து வழங்கப் போவதில்லை.

சிறுபான்மைச் சமூகங்கள் நம்பிக்கை வைத்து 90 வீதம் ஆதரவளித்து ஆட்சிக்குக் கொண்டு வந்த நல்லாட்சியில் அதே சிறுபான்மைச் சமூகங்களுக்கு எந்தத் தீர்வுமே கிடைக்காத வரலாற்றையும் நாம் கண்டிருக்கின்றோம்.

நாங்கள் தொடர்ச்சியான வரலாறாக இவற்றைத்தான் கண்டு வருகின்றோம்.

ஆகையினால் இவற்றுக்கு அப்பால் அரசாங்கத்தை விரோதத் தன்மையுடன் பார்க்காமல் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்தை அணுகி அவர்களுடன் பேச வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.” என்றார்.    






SHARE

Author: verified_user

0 Comments: