11 Sept 2020

அக்குறானை பகுதியில் நீர்வழங்கல் தொகுதியொன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

SHARE

அக்குறானை பகுதியில் நீர்வழங்கல் தொகுதியொன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்குரானை பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கிவந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நீர்வழங்கல் தொகுதியொன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்குரானை பகுதியானது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதோடு பொது போக்குவரத்துகளை காணாத பகுதியாகவும் இருந்துவருகின்றது.

இப்பகுதியில் வறட்சி காலங்களில் மக்களும் பாடசாலை மாணவர்களும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அருகில் இருக்கும் ஆற்றுப்பகுதியிலேயே அப்பகுதி மக்கள் குடிநீரைப் பெற்றுவருகின்ற நிலையில் அந்த நீர் குடிப்பதற்கு உகந்த நிலையில் காணப்படாத போதிலும் அதனையே அப்பகுதி மக்கள் அருந்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரனா அச்சுறுத்தல் காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மேற்கொண்ட களவிஜயத்தின்போது இவ்விடையம் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இதனை கவனத்தில் கொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.காந்தகுமார் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இலண்டன் இளையோர் அமைப்பின் ஊடாக குறித்த பகுதிக்கான நீர் வழங்குவதற்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அதனடிப்படையில் குறித்த பகுதியில் கிணறு ஒன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக நீர்தாங்கிக்கு நீர் ஏற்றப்பட்டு நீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்கான நீர் வழங்கல் கட்டமைப்பு ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் அக்குரானை பாடசாலைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (11) நடப்பட்டு நீர் வழங்கல் தொகுதி அமைப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட.

பாடசாலை அதிபர் சி.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முறுத்தானை, அக்குறானை, கிராம சேவையாளர் சண்முகம் குரு, அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சௌந்தரராஜா, கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர், குவேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.காந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த குடிநீர் விநியோக திட்டமானது பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user

0 Comments: