1 Sept 2020

கட்டுரை : மட்டக்களப்பை அதிரவைத்த வாள்வெட்டுக் கொலை, 15 வயது மாணவன் உயிரிழப்பு.

SHARE

(சக்தி) 

கட்டுரை : மட்டக்களப்பை அதிரவைத்த வாள்வெட்டுக் கொலை, 15 வயது மாணவன் உயிரிழப்பு.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 

எழுமையும் ஏமாப் புடைத்து.” 

ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும். 

என அழகாக செந்தமிழின் மூலம் திருவள்ளுவப் பெருந்தகை இவுலக்கிற்கு எடுத்துரைத்துச் சென்றுள்ளார். இவ்வாறான பொருட்கள் பொதித்த கருத்துக்களை ஏனைய தமிழ் புலவர்கள், கவிஞர்கள், கல்விமான்கள் என ஏராளமானோர் தெரிவித்திருக்கின்றார்கள். அவற்றை மாணவர்கள் சிறு பராயத்திலிருந்தே தேடிக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றால்தான் எதிர்காலத்தில் சிறந்த “மனிதம்” நிறைந்த மனிதர்களாக இவ்வுலகில் யொலிக முடியும் எனலாம்.

இது ஒரு புறமிருக்க கடந்த காலங்களில் மாணவர்களாக இருந்தவர்கள் தற்போது கருத்துத் தெரிவிக்கையில்... எமது ஆசிரியர்களைக் கண்டாலே எமக்கு மிகுந்த மரியாமையும், பயபக்தியும், இருக்கும், ஆனால் தற்கால மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பது இல்லை, அவர்களைக் கனம் பண்ணுவதும் இல்லை, ஆசிரியர்களைப் பார்த்து எதிர்ச் சொல் பேசும் பிள்ளைகளைத்தான் நாம் அதிகம் தற்போது காண்கின்றோம், அதுபோல் பெற்ரோருக்கும் கட்டுப்படாத பிள்ளைகளையும், அவதானிக்கின்றோம் என பெரியவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

உண்மையிலே பாடசாலை என்பது பிள்ளைகளை நல்வழிப்படுத்தி வளர்ந்து வரும் சவால்மிக்க உலகில் போட்டி போட்டு வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுக்கும் அடிப்படைக் கலைக்கூடமாக அமைகின்றது எனலாம். அது கற்கும் மாணவர்களிடையே விட்டுக்கொடுப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உள்ளிட்ட பல விடையங்களை கற்றல்களினூடாகவும். இதனை இணைபாடவிதான செயற்பாடுகளுடாகவும், ஆசிரியர் சமூகம் மாணவர்களுக்கு எடுத்தியம்பி வருகின்றது. 

ஆனாலும் ஆசிரியர்களின் கட்டுக்கோப்புக்குள் உள்ளடங்காத ஒருசில பிள்ளைகள் தமது பிறழ்வான நடத்தைகள் மீது தாக்கம் செலுத்தி செயற்படுவதனால் அது எதிர்காலத்தில் சமூகத்தின் மேலும் தாக்கம் செலுத்தும் எனலாம். இவ்வாறான சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் கடந்த சனிக்கிழமை அரங்கேறியிருக்கின்றது. 

15 வயது மாணவரொருவர் வாள் வெட்டிற்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மரணம்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 15 வயது மாணவரொருவர் வாள் வெட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (22.08.2020) இரவு சுமார் 8.30 மணியளவில் கொம்மாதுறை விநாயகர் வீதியை அண்டிய வீடொற்றிலேயே இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலை மாணவன் மீது கந்த வெள்ளிக்கிழமை, பிறிதொரு இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குழு ஒன்றுடன் சண்டை ஏற்பட்டுள்ளது, பின்னர், மறுநாள் சனிக்கழமையும் உயிரிழந்த மாணவனுடன் மற்றுமோர் இடத்தில் வைத்தும் சண்டை ஏற்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஏற்பட்ட சிறு, சிறு சண்டைகள், இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு தாக்குதலுக்கிலக்கான மாணவனின் நெற்றியில் சிறிய காயம் ஒன்றும் ஏற்பட்டிருந்துள்ளது. என்ன நெற்றியில் காயம் என தனது தாய் மகனிடம் வினவியபோது அது தகரம் வெட்டியது என தெரிவித்துள்ளான். இந்நிலையில் பிறிதொரு குழு தமது பிள்ளையை தாக்கியுள்ளது எப்பதை அறிந்த உறவினர்கள் தாக்கப்பட்ட தமது பிள்ளையையும் அழைத்துக் கொண்டு தாக்குதல் நடாத்திய குழு ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்று தாக்கிய விடயம் தொடர்பில் கேட்ட போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் அக்குழுவினர் குறித்த மாணவன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் சராமாரியாக வாளால் வெட்டியுள்ளனர். 

பாரிய வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான செங்கலடியை சேர்ந்த 15 வயதுடைய மாணவன் ரமணன் திவ்வியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இம்மாணவனின் உறவினர்களான சசிகுமார் மற்றும் பிரேமநாதன் ஆகிய இருவரும் பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

சம்பவத்தை அறிந்த ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டு மாணவனின் சடலத்தை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும், காயங்களுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதித்தனர்.

கொலைக்கு காரணமானவர்கள் தப்பிச் சென்றிருந்த இந்நிலையில்  கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 

படுகொலை செய்யப்பட்ட மாணவன் விளையாட்டுக்களில் மிகவும் ஆர்வத்தோடு பங்குபற்றுபவர் என்றும் சிறந்த பணிவான குணாம்சங்கள் கொண்டவர் என்றும் மேலும் அவரது பாடசாலையிலிருந்து குறித்த மாணவன் பங்குபற்றிய கரப்பந்து அணி முதற் தடவையாக கல்குடா வலய மட்ட அரை இறுதிப் போட்டி வரை சென்றது எனவும் அறியமுடிகின்றது.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் கடெற் அணியிலும் பங்குபற்றி சிறந்த ஒழுக்கங்களைப் பேணி வந்தவர் என்று கிராமத்தவர்களும் சக மாணவர்களும் பாடசாலைச் சமூகமும் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பில் வாள்வெட்டுக் குழுக்களை கைது செய்யுங்கள்! மாணவனின் உடலை வீதியில் வைத்து போராட்டம்

இந்த வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குமாறு கோரி வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த செங்கலடி மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (23)  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் குறித்த மாணவனின் இறுதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றிருந்தது. இதன்போது செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை ஆகிய வீதிகளை மறித்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சஸ இந்த வாள் வெட்டு குழுக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், போன்ற கோசங்களை முன்வைத்து உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.

மட்டக்களப்பை அதிரவைத்த வாள்வெட்டுக் கொலைச் சம்பவம் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது வாளும் மீட்பு.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இச்சம்பவம் தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனைகளை ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.                                           

மட்டக்களப்பு ஏறாவூர், செங்கலடி, ஐயன்கேணி, கொம்மாதுறை, போன்ற பகுதிகளில் வாளுடன் சில குழுக்களின் நடமாட்டம்  மிக மோசமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இளைஞர்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சில ரவுடிகளினால் மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்படும் இந்த வாள் குழுக்களுளை காவல்துறையினர் தயவு தாட்சணியமின்றி அடக்க வேண்டும் எனவும் அப்பகுதிவாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் அப்பகுதியில் இவ்வறான வாள் குழுக்களால் பல கடத்தல் கொள்ளை, கொலை, சமூக சீரழிவுச் சம்பவங்கள், இடம்பெற்றுள்ளன. இவ்வாறானவர்களை காவல் துறையினர் மாத்திரமல்லாமல், இராணுவத்தினர், மற்றும் விஷேட அதிரடிப்படையினர் என ஒன்றிணைந்து பொதுமக்களின் ஆதரவுடன், மடக்கிப் பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும். எனவும் அப்பகுதிவாழ் மக்கள் அங்கலாய்கின்றனர்.

மட்டக்களப்பின் பல பகுதிகளில் குறித்த வாள் வெட்டு குழுக்களின் தலைவர்கள் மறைமுகமாக இருந்து இளைஞர்களை ஒருங்கிணைத்து கடத்தல், கொள்ளை, கொலை, கப்பம், பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு, பயன்படுத்தி வருகின்றார்களா? என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இவ்வாறான சட்டவிரோதக் குழுக்களின் நடமாட்டங்களை முளையிலே கிள்ளி எறியாவிட்டால், அவர்கள் இன்னும் பல சமூக விரோத செயற்பாடுகளுக்கு துணைபோவார்கள், அவ்வாறானதொரு சம்பவமே தற்போது மாணவர் ஒருவரின் உயிரைக் காவுகொள்ளும் அளவிற்குச்  சென்றுள்ளது. எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கினறனர்.

பாடசாலையிலும், பகுதி நேர வகுப்புக்களிலும், ஏன் ஆலய விழாக்கள், பொதுநிகழ்வுகள், போன்றவற்றில் சக பாடிகள் கலந்து கொண்டு அளவளாவுவது வழக்கம். அதனை வஞ்சகமாக எடுத்துக் கொண்டு இவ்வாறு கொலை செய்யும் அளவிற்குச் தூண்டிச் செல்லும் மனோநிலை ஏற்படக் காரணமாக அமையும் காரணிகளையும், முளையிலே கிள்ளி எறிய வேண்டும். என்பதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்த காலங்களை சற்று பின்நோக்கிப் பார்த்தால் யுத்தம், வெள்ளம், வரட்சி, சுனாமி என பல பேரிடர்களைச் சந்தித்த பூமியாகும், தற்போது அவைகளிலிலிருந்து மெல்ல மெல்ல, மீண்டு, ஏனையவர்களுடன் போட்டி போட்டு கல்வி, வர்த்தகம், மருத்துவம், உள்ளிட்ட சகல துறைகளிலும், வளர்ந்து வரும் இந்நிலையில் சிற்சில குழுகுக்களினதும், பிறழ்வான நடத்தையுள்ளம் கொண்டவர்களினாலும், பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிப்படைவதற்கும், அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கும், ஏதுவாக அமைகின்றது. எனலாம். 

பெற்ரோர் தமது பிள்ளைகளை சிறு பராயத்திலிருந்தே தவறுகளைக் கண்டால் கண்டித்து வளர்க்க வேண்டும், பாடசாலைகளிலும் தமது பிள்ளைகள் எவ்வாறு அசிரியர்களின் கருத்துக்களுக்கு கட்டுப் பட்டு நடக்கின்றார்களா? எனவும் பெற்றோர் அவதானிக்க வேண்டும். அவ்வாறு தமது பிள்ளைகளளை கல்விக்கு ஒப்பாக ஒழுக்கத்திலும் சிறு வயதிலிருந்தே வளர்த்தெடுத்தால்தான் அவர்கள் பாடசாலையை விட்டு விலகியதும் அவர்களிடத்தில் சிறு வயதில் பழகிய ஒழுக்கம் நிலைத்திருக்கும். அதுவே அவர்களை சிறந்த நற்பண்புள்ளவர்களாக்கும் என்றால் அது மிகையாகாது. 











SHARE

Author: verified_user

0 Comments: