18 Aug 2020

தங்கேஸ்வரியின் கருத்தை பொய்பித்த வியாழேந்திரன்

SHARE

 (படுவான் பாலகன்)

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள் பல்வேறு விடயங்களைப் பொய்பித்தும், எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கியும் உள்ளது. மாவட்டத்தில் நான்கு கட்சிகளைச் சேர்ந்த ஐவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து இருவரும், முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஒருவரும், முஸ்லிம் காங்கரஸில் இருந்து ஒருவருமாக ஐவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாவிருந்த ஸ்ரீநேசன், யோகேஸ்வரன், அமீர் அலி, ஹிஸ்புழ்ழா, அலிசாகீர் மௌலானா ஆகிய ஐவரும் தோற்கடிப்பட்டுள்ளனர். 2015 தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரான சதாசிவம் வியாழேந்திரன் மாத்திரமே மீண்டும் தெரிவாகியுள்ளார்.
ஆறுபேரில் ஒருவர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், இவரது அரசியல் பிரவேசம் மற்றும் கட்சி மாறல்கள் தொடர்பில் இக்கட்டுரை ஆராய்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் புளட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வியாழேந்திரன், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் இடம்பெற்ற பிரதமர் மாற்றத்தின் போது, குறிப்பாக மகிந்த ராஜபக்ச பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவ்வரசாங்கத்துடன், இணைந்து கொண்டார். இதன் மூலமாக தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து தூரமானார். 

இதனால், கிழக்கு அபிவிருத்தி என்ற அமைச்சினைப்பெற்றுக்கொண்டார். ஆனாலும் அவ்வாட்சி மாற்றம் நிலைபெறாது 52நாட்களில் மீண்டும் ரணில்விக்ரமசிங்க பிரதமரானார். பின்னர், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியானார். இதைத் தொடர்ந்து, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கே வாக்கு வங்கி அதிகமாகவிருந்தது. இதனால்தான் தேர்தலில் களமிறங்க நினைக்கும் புதியவர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் வேட்பாளர்களாக இறங்குவதற்கு முண்டியடிப்பதுண்டு. இக்கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள் தேசிய கட்சிகளாகவே இருக்கும். இத்தேசிய கட்சிகளில் தமிழர்களும், முஸ்லிம்களும் போட்டியிடுவர். இதனால், இக்கட்சிகளில் வெற்றியை சூடும் வாய்ப்பினை முஸ்லிம் வேட்பாளர்களே கொண்டிருப்பர். 

கடந்த வரலாறுகள் இதனைச்சான்றுப் படுத்தியும் இருக்கின்றன. அதாவது வாக்கினை சேகரித்துக்கொடுக்கும் முகவர்களாக மாத்திரமே தமிழ் வேட்பாளர்கள் இருப்பர். ஆனால் இம்முறை தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்களின் பட்டியல்கள் வழமைக்கு மாறாகவே காணப்பட்டன. தமிழ்தேசிய கூட்டமைப்பில் வழமை போன்று தமிழ்வேட்பாளர்கள் மாத்திரம் களமிறக்கப்பட்டனர். அதேபோல தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலும் தமிழர்கள் மாத்திரமே களமிறங்கினர். இதேவேளை தேசிய கட்சியான பொதுஜன பெரமுன கட்சியிலும் தமிழர்கள் மாத்திரமே வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். 

அக்கட்சியில்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த சதாசிவம் வியாழேந்திரன் போட்டியிட்டார். கடந்த கால வரலாற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றவர்கள், அடுத்ததடவை வேறுகட்சியில் போட்டியிட்டால் தோல்வி உற்றமையே வரலாறு. குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்து, அமரத்துவமடைந்த தங்கேஸ்வரி, முதலில் தமிழ்தேசிய கூட்டமைப்பிலே போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், அக்கட்சியில் இருந்து நீங்கி வேறொரு கட்சியில் போட்டியிட்டார். இதன்போது தோல்வியை தழுவியக்கொண்டார்.

தோல்வியை தழுவிக்கொண்ட தங்கேஸ்வரி, தமிழ்தேசிய கூட்டமைப்பு தும்புத்தடியில் களமிறங்கினால்கூட அதற்குதான் மக்கள் வாக்களிப்பர். என்ற கருத்தினை முன்வைத்திருந்தார். இக்கருத்தினை பலரும் ஏற்றும் இருந்தனர். இதனால் என்னமோ, தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து சதாசிவம் வியாழேந்திரன் விலகியதனால் மீண்டும் வெற்றிபெற மாட்டார் என்ற கருத்தினை பலரும் கொண்டிருந்தனர். ஆனால் அக்கருத்து இப்போது பொய்ப்பிக்கப்பட்டுள்ளது. பொதுஜனபெரமுன கட்சியில் போட்டியிட்ட வியாழேந்திரன் வெற்றிபெற்றிருக்கின்றார். இதன்மூலம் மக்கள் கட்சிகளுக்காக வாக்களிப்பதென்பது பொய்ப்பிக்கப்பட்டு, நபருக்காக வாக்களிக்கும் நிலையை உருவாக்கியுள்ளதெனலாம். நபர்களின் செல்வாக்கே, வாக்கு வங்கியினை நிலைநிறுத்தும் என்ற உண்மையை வலியுறுத்தவதாக கூட இத்தேர்தல் முடிவினைப் பார்க்கத்தோன்றுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் இழந்த அபிவிருத்திகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்களும், எதிரணியில் இருந்து செயற்படுபவர்களும் சிறந்ததொரு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: