16 Jul 2020

கிழக்கு மாகாணத்தின் செயற்திறன் மிக்க MPயாக ஸ்ரீநேசன் தெரிவு

SHARE
இலங்கை நாடாளுமன்றத்தில் செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்திவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை அவதானித்து அதில் பொதுமக்களுக்கு வினைத்திரனான சேவைகளை ஆற்றிய வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் செயற்பாட்டினை மந்த்ரி.LK எனும் இணையத் தளமானது மேற்கொண்டு வருகிறது.

தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு வருகை தந்தமை, பாராளுமன்றத்தினை முழுமையாக பயன்படுத்தி, பொதுமக்களின் பிரச்சனைகளை உரிய முறையில் தெரியப்படுத்தியமை, பொருத்தமான பிரேரணைகள் மற்றும் வினாக்களை முன்வைத்து தொடர்புடைய அமைச்சுக்களின் ஊடாக தீர்வுகளை பெற்றுக் கொடுத்தமை என பல்வேறு வகைப்படுத்தலின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகள் ஆராயப்பட்டன.

இதனடிப்படையில்  கிழக்கு மாகாணத்தில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகவும், இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஞானமுத்து சிறிநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை 103 விவாதங்களுக்கும், 43 ஒத்தி வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கும் மக்கள் நலன்சார்ந்த கருத்துகளை முன்வைத்துள்ளார்.

மேலும் பொருளாதார கொள்கைகள், திட்டமிடல், நிதி, மீள்குடியேற்றம், கல்வி, சுகாதாரம், விவசாயம்,  வீடமைப்பு மற்றும் அரசியலமைப்பு உள்ளிட்ட 15 விடயங்களில் அதிக கவனம் செலுத்தி பிரதம மந்திரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களிடம் வினாக்களையும் முன்வைத்துள்ளதோடு, பொதுமக்களின் காணி விடுவிப்பு, உண்ணிச்சையை அண்டிய கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களுக்கான சேவையினை உருவாக்குதல், படையினரால் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவித்தல், தொண்டராசிரியர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடங்களுக்கு தனியாள் பிரேரணையும் சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: