14 Jul 2020

தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே பௌத்த சிங்கள பேரினவாத அரசின் நோக்கமாகும் - கூட்டமைப்பு வேட்பாளர் உதயகுமார்.

SHARE
தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே பௌத்த சிங்கள பேரினவாத அரசின் நோக்கமாகும்  - கூட்டமைப்பு வேட்பாளர் உதயகுமார்.
தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே பௌத்த சிங்கள பேரினவாத அரசின் நோக்கமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை (14) வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டு கருத்துரைக்கயிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்… இந்த நாட்டிலே 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களாகிய நாம் நமது உரிமைக்காகப் போராடி வருகின்றோம் அது ஆரம்பத்தில் அகிம்சைப் போராட்டமாகவும் பின்பு ஆயுதப் போராட்டமாகவும் இடம்பெற்று தற்போது அரசியல் ரீதியான இராஜதந்திரப் போராட்டமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இதனை நாம் தற்போது காணலாம்.

2009 இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு எமது போராட்டமானது சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு இராஜதந்திர ரீதியிலான அரசியல் சார்ந்த போராட்டமாக மாறி உள்ளதனைக் காணலாம். 
தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெற்றக் கொடுக்கவும் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகளுக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குமான நீதியினையும் இழப்பீடுகளையும் பெற்றுக்கொடுக்கவுமே இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனை நாம் யாவரும் அறிகின்றோம்.

ஆனால் இந்த புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பேற்றதன் பிற்பாடு முதலில் மேற்கொள்ளப்பட்ட விடயம் ஜெனிவா மனித உரிமைப் பிரேரணையில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியமையைக் குறிப்பிடலாம். ஆனால் இந்தப் பிரேரணைக்கு இணை அணுசரணை வழங்கியதே இலங்கை அரசுதான் என்பதையும் நாம் மறக்க முடியாது.

புதிய ஜனாதிபதியானவர் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சிங்கள மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாகவேதான் இந்த ஜெனிவா பிரேரணையில் இருந்து தன்னிச்சையாக வெளியேறி உள்ளார் என அரசியல் விமசகர்கள் தெரிவித்தாலும், அண்மைய நாட்களில் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளைப் பார்க்கும்போது சிங்கள பேரினவாதிகளால் நன்கு திட்டமிடப்பட்ட நீண்டகால செயற்பாடாகவேதான் இதனைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

இச் செயற்பாட்டின் ஒரு கட்டம்தான் தமிழர் உரிமைக்காகப் போராடும் ஒரே கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்தி எமக்கான அரசியல் தீர்வில் இருந்து பின்வாங்கச் செய்யவும் ஐ.நா வின் நல்லிணக்கப் பொறிமுறையினை நடைமுறைப் படுத்தப்படாமல் தடுக்கவும் இந்தத் தேர்தலிலை இந்த அரசானது நன்கு பயன்படுத்துவதனைக் காணலாம். இதன் செயற்பாடுதான் த.தே.கூட்டமைப்பிற்கு எதிராக களமிறக்கப்பட்ட கட்சிகளின் செயற்பாடுகள் அமைவதனைக் காணலாம்.

எனவே அன்பான தமிழ் வாக்காளப் பெருமக்களே எமது ஆணையினைக் கொண்டு எம்மையே அழிப்பதற்கான கபட நாடகத்தினை தற்போதைய பேரினவாத அரசு மேற்கொண்டுள்ளது இதற்காக மூன்றாம்நிலை கடைக்கோடி உதிரிக் கட்சிகளான தங்களின் எடுபிடிகளை இதற்காக அரசு பயன்படுத்தியுள்ளதனையும் இதனூடாக தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே பௌத்த சிங்கள பேரினவாத அரசின் நோக்கமாகும். 

ஆகையால் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தழிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் எமது இனத்தின் விடிவுக்காகவும் சிங்கள பேரினவாதத்திற்கும் அவர்களின் கைகூலிகளுக்கும் அடிக்கின்ற ஒரு சாட்டையாகவும் அமைய வேண்டும் என நான் அன்பாக வேண்டிக் கொள்கின்றேன் என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.  




SHARE

Author: verified_user

0 Comments: