21 Jun 2020

கட்டுரை : சர்வதேச யோகா தினம் யோக நெறியின் வழி இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும்.

SHARE

(முரளீதரன் நவரத்தினம்)

சர்வதேச யோகா தினம் யோக நெறியின் வழி இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும்.
மனிதர்கள் தம் சாதாரண நடைமுறை வாழ்க்கை என்று நினைத்திருந்த ஒழுங்கு, கொரோனா வைரஸ் காலத்தில் கேள்விக்குறியாகியுள்ளது. நமது இயல்பு வாழ்க்கை தடைப்பட்டதாகத் தோன்றும் இக்காலத்தில் நம்மால் இயற்கையின் செயற்பாட்டை,  வெளிப்படும் அழகை இரசிக்க முடிகிறது. நம்மால் ஏற்படுத்தப்பட்ட தடைகள், காயங்கள் நீங்கிய நிலையில் இயற்கை அழகு மெருகேறியிருக்கிறது. நாமும் உண்மையில் இயற்கை அன்னையைப் போன்றே உள்முகமாகப் பயணப்பட்டு, அதன் பயனாக வெளிப்படும் அழகை புறத்தில் காட்ட வேண்டியவர்கள் தான். அகத்தின் அழகை புறத்தில் காட்டும் ஒளிபொருந்திய ஒரு யோகியின் முகத்தைப் போல.

ஆசை, பற்று, பயம், கோபம், போட்டி, பொறாமை, ஆணவம் போன்ற பல மனநிலைகளும் எமது புலன்வழி புறப்பயணத்தின் விளைவானவை. இதனால் வீணாக்கப்படும் எமது பிராண சக்தியின் வெளிப்பாடே உடலில், மனதில் வெளிப்படும் நோய்களும் அமைதியீனங்களும்.

யோகம் என்றால் என்ன?

சித்தம் எனும் குளம் அலைகளெனும் விருத்திகள் அற்று அமைதியாக இருக்கும் போது அடியை (ஆன்மாவை) காணலாம். இதுவே யோகம். யோகம் என்பது அகப்பயணம். பொதுவாக நமது உணர்வுகள் ஐம்புலன்கள் வழி வெளிப்புற உலகை நோக்கியதாக இருக்கிறது. இதனை உட்புறமாகத் திருப்பும் செயற்பாடே(Reversing process) யோகம் எனப்படுகிறது. பதஞ்சலி முனிவர், திருமூலர் போன்ற சித்தர் பெருமக்கள் யோகத்தை விளக்கி முறையே சூத்திரங்களாகவும் பாடல்களாகவும் தந்துள்ளார்கள். ஆசனங்கள் மட்டும் யோகமன்று. இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதி என எட்டு அங்கங்களை கொண்டு அஷ்டாங்க யோகமென அழைக்கப்படுகிறது. பதஞ்சலி முனிவரின் சமகாலத்தவராகக் கருதப்படும் கிரியா பாபாஜி, கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு அளித்த யோகத்தின் உயிர்ப்பூட்டலையும் , பதினெண் சித்த யோகத்தையும் இணைத்ததாக  கிரியா யோகம்எனும் விழிப்புணர்வுடன் செய்யக்கூடிய செயல்முறையை நமக்கு தந்துள்ளார். இதனைப் பயிற்சி செய்யும் போது நம் உடலில், உள்ளத்தில் என படிப்படியாக ஏற்படும் மாற்றங்களை நாம் உணர்ந்து, இறைநிலை நோக்கிய பயணத்தை விரைவாக்க முடியும். கிரியா பாபாஜியின் கோவில், அவர் சித்தர் போகநாதரிடம் தீட்சை பெற்ற கதிர்காமத்தில் அமைக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யோகக் கலையினால் ஏற்படும் பயனானது பயிலுபவர்களின் ஆர்வம் மற்றும் தேடலின் ஆழத்தைப் பொறுத்து இருக்கும். இது ஆசனங்களால் மேம்படும் உடலின், மனதின் ஆரோக்கியத்தோடு திருப்திப்பட்டுக் கொள்பவர்களில் இருந்து, இறைநிலை எய்தி சித்தர்கள், முத்தர்களாவது வரை இந்த ஆனந்தமயமான புனிதப்பயணத்தின் வீச்சு நீண்டு செல்கிறது.

யோகத்தின் உலகளாவிய நிலை.

இன்று உலகம் முழுவதும் யோகக்கலை பலராலும் பயிலப்பட்டு வருகிறது. ஒரு உடற்பயிற்சிக் கல்வியாக வெளிநாடுகளில் யோகம் உட்படுத்தப்படுவதான குற்றச்சாட்டு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இருப்பினும், இன்று யோகநெறி நின்று ஆழமாக பயிற்சி செய்து ஆன்மீக நிலையின் உயர்வுக்கு சென்ற பலர் மேற்குநாட்டினராகவே இருக்கின்றனர். பல ஆழமான ஆராய்ச்சிகளும், கட்டுரைகளும் அவர்களால் எழுதப்பட்டுள்ளன. இது பல இந்திய யோகிகளின் மேற்கு நோக்கிய பயணத்தினாலும், பல மேற்கத்தியர்களின் தேடலின் விளைவான கிழக்கு நோக்கிய பயணத்தாலும் ஏற்பட்ட நீண்டகால விளைவாகும். கிரியா பாபாஜியால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பரமஹன்ச யோகானந்தர் மூலம் பல கிரியா யோகிகள் மேற்கில் உருவாகினர். இவர் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதைபலரையும் கிரியா யோகத்தின்பால் ஈர்த்தது, இக்கட்டுரையாளர் உட்பட. பல கிறிஸ்தவர்களும் இவருடைய நூல்கள் மூலம், இயேசுநாதரது போதனைகளின் உட்பொருளைப் புரிந்து கொண்டார்கள். யோகானந்தரின் பூவுலக வாழ்வு முடிவுக்கு வந்தபின் யோகி இராமையா மற்றும் அவரது சீடர்களின் மூலம், கிரியா பாபாஜியின் சேவை மனித குலத்துக்குக் கிடைத்து வருகிறது. கிரியா யோகம், இல்லற யோகியாய் வாழ்வதற்கான பொருத்தமான செயல்முறை வடிவமாகும்.

மேலைநாட்டினரின் முயற்சியால் சித்தர்கள் பலரின் பாடல்கள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. திருமந்திரம் ஐந்து பாகங்களாக ஆங்கிலத்தில் கிடைக்கிறது. இவை எல்லாம் பிறநாடுகளில், யோக மார்க்கத்தின்பால் ஏற்பட்ட ஈடுபாட்டினால் நிகழ்ந்தவை. எனது மூன்றாவது கிரியா யோக தீட்சைக்காக கியூபெக் ஆசிரமத்திற்குச் சென்ற போது நான் ஒருவனே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவனாக இருந்தேன். பலரும் ஆர்வத்தினால் சித்தர்கள் பாடலான ஆதி காலத்தில் தில்லையில் திருமூலர்..என்று தொடங்கும் பாடலை ஆங்கிலத்தில் எழுதிவைத்து மனப்பாடம் செய்து பாடினர். அவர்கள் என்னிடம் கதைத்த போது ஏக்கத்தோடு கூறியது என்னவெனில், தமிழனாக இருப்பதால் எனக்கு சித்தர் இலக்கியங்களைப் படித்துப் புரிவது இலகுவாக இருக்கும் என்பது தான். இதனை எவ்வளவு தூரம் நாம் உணர்ந்து இருக்கிறோம் அல்லது மறந்திருக்கிறோம் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நாம் பெரும்பாலும் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளோம். யோகம் என்று செயல்முறை மூலம் தன்னுள் இறையுணர்வைப் பெறும் உன்னத நெறியின்பால் நம் ஆர்வம் குறைவாகவே உள்ளது.

பல உன்னதமான மதங்களும் பின்பற்றப்படும் நம்நாட்டில் அமைதி, இனஒற்றுமை, மதசகிப்புத்தன்மை இன்றும் ஏன் ஏற்படவில்லை என்பது சகல மனிதர்களினாலும் சிந்தித்துப் பார்க்கப்படவேண்டியுள்ளது. எமது அகயாத்திரை மூலமே ஆன்ம தரிசனம் பெறலாம். அன்பே சிவம்எனும் மகாவாக்கியத்தின் உண்மைப் பொருள் உணரலாம். உள்ளக அமைதியில் ஆரம்பித்து குடும்ப, கிராமிய, சமுதாய மற்றும் நாடெங்கும் இந்த அமைதி, அன்பெனும் ஊதுபத்தியின் மணத்தை நாம் பரவச் செய்யலாம். ஆனால்  இது மேல்மட்டத்திலிருந்து பெற்றுத் தரப்படும் என்ற எதிர்பார்ப்பு காலம் காலமாகத் தொடர்கிறது. இன்று எமது அமைதி, சமாதானம், இனப்பிரச்சனைத் தீர்வுக்கான புறத்தேடல் அரசியல்வாதிகள், மத தலைவர்கள், வல்லரசுகள் என்று நீள்கிறது. மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாமல் வலிந்து பெறப்படும் எந்த தீர்வும் நீடித்து நிலைக்கப் போவதில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது. ஆயுதங்கள் மட்டுமே மௌனித்துள்ளன, மக்கள் மனங்களில் போராட்டம் தொடர்கிறது. காத்திருப்புகளும் தொடர்கின்றன. மக்களின் அவலங்களை கலைநயத்துடன் வெளிப்படுத்தும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் போற்றப்பட வேண்டியவர்கள். தமிழ்மக்கள் செய்ய வேண்டிய அரசியல் உத்திகள் பற்றிய கட்டுரைகளுக்கும் பலரால் சிந்தித்து எழுதப்படுகின்றன. ஆனால் பொதுவாகவே இவர்களிடையே இனப்பிரச்சனை தொடர்பான சலிப்பும், இயலாமையும் இருப்பதை காண முடிகிறது.

சமாதான பேச்சுவார்த்தை, ஆயுதப்போராட்டம், மீண்டும் பேச்சுவார்த்தை என்று தெரிவுகள் இரண்டைத் தாண்டிய, மூன்றாவதும் நிச்சயமானதுமான தெரிவொன்று உள்ளது என்பதை இந்த சர்வதேச யோகா தினத்தில் மனதில் உறுதிப்படுத்துவோம்.

மூன்றாவது தெரிவு, ஆன்மீக வலிமை.

பரமஹன்ச யோகானந்தர் கிரியா யோகம் பற்றிக் குறிப்பிடும் போது, “இறைவனை அடைவதற்கான சாத்திரப் பாதைமாட்டுவண்டிபோன்று மந்தமானது, நிச்சயமற்றது. இதற்கு மாறாக கிரியா யோகத்தை ஆகாய விமானவழிஎன்று சரியாகக் கூறலாம்என்கிறார். யோக வழி நிற்கும் போது நாம் எவ்வளவு தூரம் இறைவனை நோக்கி பயணித்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

நான் எனது 49 வது வயதில் யோகா பட்டப்படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாகத்தில் தொடங்கி 53 வது வயதில் Msc in Yoga முடித்தேன். இக்காலங்களிலேயே கிரியா யோகத்தில் தீட்சை பெற்று பயிற்சி செய்து வருகிறேன். இந்த மார்க்கத்தில் செல்ல வயதாகி விட்டதோ என்ற சந்தேகம், இன்று தீர்ந்து, வயது ஒரு தடையில்லை என்பதை உறுதியாகக் கூறும் நிலையில் உள்ளேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்று திருமூலர் அனுபவித்த இன்பத்தை நாமும் நிச்சயமாக அனுபவிக்க முடியும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எமது விரிவுரையாளரான திரு.ஜெயரஜூன் சிவலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இதுவரை 206  பட்டதாரி மாணவர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இப்பட்டதாரிகள் பலரும் இன்று ஆசிரியர்களாக யோக சேவையைத் தொடர்கின்றார்கள். அதுமட்டுமன்றி மாஸ்ரர் யோகாஎன்ற நிறுவனத்திலும் சிறுவர், இளையோர் மற்றும் முதியோர் என்று வயது வேறுபாடின்றி பலரும் பயனடைந்து வருகிறார்கள். இது ஒரு யோக ஆசிரியர் மூலம், ஏழு வருடத்தில் நிகழ்ந்த மாற்றம். ரொரன்ரோவின் சிறிய தமிழ் சமூகத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்தை, இலங்கையின் முழு சமூகத்துக்கும் பொருத்திப் பார்த்ததன் விளைவே இந்தக் கட்டுரை.

எவ்வாறு சாதிக்கலாம்?

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்து தன்னை உணர்ந்தவர்கள் சிலராகவும், செய்யாதவர்கள் பலராகவும் இருப்பதே ஆகும் என்பது, தவம் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவரின் கூற்று.

இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.

இலங்கையில் பல இடங்களில் யோகக்கலை ஏற்கனவே வேர்விட்டு வளர்த்து வருகிறது. பலரும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் இதனை பரந்துபட்ட அளவில் சகல மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. யோக மரபு எம் தமிழ்மக்களின் இரத்தத்தோடு, சித்தர்கள் வழி கலந்திருந்த கலை. எமது அறியாமையினால் தடைப்பட்ட இப்பயணம் தொடர வேண்டும். பாடசாலை மாணவர்களிடையே யோக பாடத்திட்டம் கல்வி அமைச்சின் வழி அமைக்கப்படவேண்டும். இப்பாடத்திட்டத்தில் திருமந்திரம், சித்தர் இலக்கியங்கள் உள்வாங்கப்படல் அவசியமானது. எழுத்துப் பரீட்சை மற்றும் செயல் முறை ஆசன பரீட்சைகள் மூலம் மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்கலாம்.

சகல துறைகளிலும் முக்கியமான எமது உடல், மன, ஆத்ம தேடலுக்கான யோகம் பற்றிய ஒரு துறை, எமது பல்கலைக்கழகங்களில் இதுவரை ஆரம்பிக்கப்படாதது குறித்து நாம் உண்மையில் வெட்கப்படவேண்டும். மாணவ சமூகத்துக்கான யோகப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பலரின் தேவையைப் பூர்த்தி செய்ய முதலில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் யோகப் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்படுவது மிகவும் முக்கியமானது. இதனை ஆரம்பத்தில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆரம்பிக்கலாம். இதற்கு இந்திய அரசு உதவியை நாடலாம். டிப்ளோமா முதல் முதுகலை வரை தொடரும் வகை செய்யலாம். வயது வேறுபாடின்றி கற்க விருப்பம் உள்ளவர்கள் சகலரையும் உள்வாங்கலாம். உடற்பயிற்சி ஆசிரியர்கள், முன்னாள் போராளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது மட்டுமின்றி, வேலைவாய்ப்பும்,  பட்டப்படிப்பை முன்னர் தவற விட்டவர்களுக்கு மறுவாய்ப்பும் கிடைக்கும். மாகாண, மத்திய அரசுகள் கிராமந்தோறும் யோகசாலைகள் அமைக்க விரும்புவர்களுக்கு நிதியுதவி அளிக்கலாம்.

குறுகிய கால பயன்கள்

மாணவர்களிடையே உற்சாகம், படிப்பில் மனக்குவிப்பு, விளையாட்டுகளில் ஆர்வம், தாழ்ந்திருக்கும் கல்வி நிலையில் எழுச்சி, கெட்ட பழக்கங்களில் நாட்டமின்மை, சமூக சேவைகளில் ஈடுபாடு, ஆரோக்கியமான உணவு பற்றிய விழிப்புணர்வு எனப் பல நன்மைகளை அவதானிக்கலாம்.

நீண்ட கால பயன்கள்

ஆரோக்கியமான சமுதாயம், மன‍அமைதி பெறுவதால் போரினால் ஏற்பட்ட வடுக்கள் ஆறுதல், நாட்பட்ட நோய்களின் தாக்கம் குறைதல் அல்லது விடுதலை. சமூக சேவையில் ஈடுபாடு, சூழல் பாதுகாப்பு, ஆரோக்கிய சத்வ உணவுகளில் நாட்டம், சகலமக்களிலும் இறைத்தன்மையைக் காணும் நிலை வருவதால் இயற்கையாகவே சாதிய முறை சாவடையும். ஆரோக்கியமான அரசியல் பண்பாடு உருவாகும்.
யோகம் என்பது சகல மதத்தவருக்கும் பொதுவானதால், தத்தம் மதங்களில் இருந்தே இக்கலையினைப் பயில்வதால் தம்மதம் பற்றிய தெளிவும், பின்பற்றும் ஈடுபாடும் அதிகரித்து, பிறமதத்தவரையும் மதிக்கும் மனநிலை ஏற்படும். மதவெறி, மதமாற்றங்கள் முடிவுக்கு வரும்.

இனங்களுக்கிடையே நல்லுணர்வு வளரும். தம்மை உணரும் எவருக்கும் அன்பென்ற அந்த இறைஉணர்வு மட்டுமே எஞ்சியிருக்கும். இந்த ஆன்மீக உணர்வை, வலிமையை வளர்த்துக்  கொண்ட எந்த இனத்தை நோக்கியும் மற்ற இனங்கள் காந்தம் போன்று கவரப்படும். அந்ந இனத்தோடு தொடர்புகளைப் பேணவும், உறவாடவும் தூண்டப்படும். தாமாகவே முன்வந்து சிறுபான்மையினர் உரிமைகளை கொடுப்பதும் நடக்கும் என்பதும் உண்மை. ஆனால் அத்தகைய ஆன்மீக வலிமை பெற்ற இனம் தமக்கும் பிரச்சனைகள் உண்டா? என்று கேட்கும் நிலையில் தான் இருக்கும்.

முடிவாக, விஞ்ஞானபூர்வமான எமது முன்னோர்கள் வழங்கிய யோகக்கலையை பரவலாக சகலருக்கும் கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும். இதற்கான முதற்படியாக வடகிழக்கு மற்றும் சகல பல்கலைக்கழகங்களிலும் யோக பீடம் அமைக்கப்படுவது முக்கியமானது. இதற்கான முயற்சியை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள், சமயத்தலைவர்கள் மற்றும்  அரசியல் தலைவர்கள் கூட ஒற்றுமையாக தன்னார்வத்தோடு, இளையோர் அண்மையில் கொரோனா காலத்தில் செயற்பட்டதை முன்னுதாரணமாகக் கொண்டு உண்மையாக்க வேண்டும்.

ஓம் கிரியா பாபாஜி நம ஓம்.

முரளீதரன் நவரத்தினம் MSc in Yoga, கிரியா யோக சாதகர், ‘யோக வாழ்வு இதழின் இணைஆசிரியர் . (கருத்துக்களைப் பதிவிட- muralee31@yahoo.ca) கருத்துகள் மற்றும் கடந்த ஆண்டு இதழைப் பெற்றுக்கொள்ளவும் தொடர்புகளுக்கு; muralee31@yahoo.ca


SHARE

Author: verified_user

0 Comments: